விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்'
தமிழ் சினிமா உலகில் ஏதாவது ஒரு படம் 1000 கோடி வசூலைக் கடந்துவிடாதா என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகரின் படம்தான் அந்த சாதனையை முதலில் படைக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.
ஆனால், 600 கோடி வசூல் சாதனைதான் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்', விஜய் நடித்த 'லியோ' ஆகியவை கடந்த வருடம் வெளியாகி அந்த சாதனையைப் படைத்தன.
இந்த வருடம் வெளியான படங்களில் முதல் முறையாக 400 கோடி வசூலைக் கடந்த படமாக விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் அமைந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 413 கோடி வசூலை 'தி கோட்' பெற்றுள்ளதாக அறிவித்தது.
விஜய் நடித்து வெளியான ஒரு படம் 400 கோடி வசூலைக் கடப்பது இது இரண்டாவது முறை. கடந்த வருடம் வெளியான 'லியோ' படம் 7 நாட்களில் 461 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் 12 நாட்களில் 540 கோடி வசூலித்த அறிவிப்புடன் நிறுத்திவிட்டார்கள். ஆனாலும், 600 கோடியை அப்படம் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
'லியோ' படத்துடன் ஒப்பிடும் போது 'தி கோட்' படம் 400 கோடி வசூலைக் கடக்க கூடுதல் நாட்களை எடுத்துக் கொண்டுள்ளது.