நடிகர் டெல்லி கணேஷ் காலமானார், தூக்கத்திலேயே பிரிந்த உயிர் : திங்களன்று இறுதிச்சடங்கு
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டில்லி கணேஷ் சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு (நவ.,9) காலமானார். அவருக்கு வயது 80. வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும், பசி படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றார். வெள்ளித்திரை மட்டுமல்லாது, சின்னதிரையிலும் தனது இயல்பான நடிப்பால் கோலோச்சிய டெல்லி கணேஷ், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 1964- 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் டில்லி கணேஷ் பணியாற்றி உள்ளார்.
குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும், திரைத்துறையில் பங்களித்தவர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, ராமபுரம் வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி கணேஷிற்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மகன் மகா, ‛என்னுள் ஆயிரம்' படம் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து சக்ரா படத்தில் நடித்தார்.
திங்கள் அன்று இறுதிச்சடங்கு
டெல்லி கணேஷ் மறைவு குறித்து அவரின் மகனும், நடிகருமான மகா செய்தியாளர்களிடம் கூறுயைில், அப்பாவுக்கு 80 வயதாகிறது. சமீபத்தில் தான் சதாபிஷேக விழா நடத்தினோம். நன்றாகத்தான் இருந்தார். வயது மூப்பு பிரச்னையால் வரும் உடல்நல பிரச்னை இருந்தது. நேற்று அக்கா உடன் நன்றாக அப்பா பேசிக் கொண்டு தான் இருந்தார். நேற்று இரவு மாத்திரை கொடுக்க அப்பாவை எழுப்ப சென்றோம். அப்போது அசைவின்றி இருந்தார். டாக்டர் வந்து பார்த்தாங்க. ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறினார். இறுதிச்சடங்கு நாளை(நவ., 11) காலை 10 முதல் 11 மணிக்குள் நடக்கும். உறவினர்கள் வர வேண்டி உள்ளது என்றார்.