25 நாட்களைக் கடந்து லாபத்தை அள்ளிக் கொடுத்த 'அமரன், லக்கி பாஸ்கர்'
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு வரும் படங்கள் என்றாலே 'ஸ்பெஷல்' ஆனவை. அந்த நாட்களில் வெளியாகும் படங்கள் பெரும் வெற்றி பெறும் போது ரசிகர்களின் நினைவுகளில் பதிந்துவிடும். அப்படி ஒரு படமாக இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் அமைந்துவிட்டது.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான 'அமரன்' படம் எதிர்பார்ப்புகளையும் மீறி மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 25 நாட்களில் இப்படம் சுமார் 300 கோடி வசூலை உலக அளவில் கடந்துள்ளதாகத் தகவல். தமிழகத்தில் மொத்த வசூல் 150 கோடியைக் கடந்துவிட்டது என்பது கூடுதல் தகவல். சுமார் 150 கோடியை பங்குத் தொகையாக இப்படம் இதுவரையில் தந்துள்ளது என்கிறார்கள். இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாகவும் இந்தப் படம் அமையலாம்.
இவற்றோடு வெளிவந்த ஜெயம் ரவி நடித்த 'பிரதர்', கவின் நடித்த 'பிளடி பெக்கர்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆச்சரியமாக தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' படம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று லாபத்தையும் தந்துள்ளது. 100 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் 50 கோடியை பங்குத் தொகையாகக் கொடுத்துள்ளதாம். தமிழகத்தில் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சுமார் 10 கோடி வரையிலும் லாபத்தைக் கொடுத்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
'அமரன்' படம் அடுத்த வாரமும் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் நிறைய நேரடிப் படங்கள் வருவதால் 'லக்கி பாஸ்கர்' ஓட்டம் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரலாம்.