உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால் உடல்நிலைக்குக் காரணமான 'அவன் இவன்'

விஷால் உடல்நிலைக்குக் காரணமான 'அவன் இவன்'

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்து 2011ல் வெளிவந்த படம் 'அவன் இவன்'. அந்தப் படத்தில் ஒரு கண், மாறு கண் கொண்ட கதாபாத்திரமாக விஷால் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இயல்பாக இருக்கும் அவரது கண்களை மாறு கண் போல மாற்றி நடிப்பதற்காக சிலவற்றைச் செய்துள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் வரை பெரும்பாலான நாட்களில் விஷால் அவருடைய கண்களை மாறு கண் போல வைத்துக் கொண்டதால் அவருக்கு தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆரம்பமான அந்தப் பிரச்சனை அவருக்கு தீராத வலியை உண்டாக்கி உள்ளது. அதற்காக வலியைக் குறைக்க அவர் இரவு நேரங்களில் மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அப்போது உடன் நடித்த ஆர்யா பேசியுள்ளார்.

சமீபத்தில் விஷாலுக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த தலைவலி, கண் பார்வை வலி ஆகியவையும் சேர்ந்து கொண்டுள்ளதாம். அதனால்தான் 'மத கஜ ராஜா' நிகழ்ச்சியில் அவரது கண்களில் தொடர்ந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தற்போது டாக்டரின் ஆலோசனைப்படி அவர் முழுமையாக ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறாராம்.

உடலை வருத்தி நடித்துக் கொடுத்ததற்காக கடந்த 14 வருடங்களாக தவித்து வருகிறார் விஷால் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !