சர்ச்சைக்குரிய நடன காட்சி நீக்கம் : அமைச்சரின் எதிர்ப்புக்கு பணிந்த ச்சாவா படக்குழு
பாலிவுட்டில் அவ்வப்போது வரலாற்று பின்னணி கொண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வரலாற்று படமாக உருவாகியுள்ளது 'ச்சாவா'. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறாக இந்த படம் உருவாகி உள்ளது. லட்சுமணன் உடேகர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டிரைலர் வெளியானது. அதில் சத்ரபதி சாம்பாஜி மன்னன் நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு சத்ரபதி வம்சத்தினரிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. அது மட்டுமல்ல, மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சாம்ராட் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்த படத்தில் குறிப்பிட்ட அந்த நடன காட்சி வரலாற்றை திரித்துக் கூறுவது போல அமைந்துள்ளது. அந்த காட்சியை இயக்குனர், தயாரிப்பாளர் நீக்கிவிட்டு படத்தை வெளியிட வேண்டும், இல்லை என்றால் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டு அவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் நிச்சயம் படம் வெளியாக தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட சில நிமிட நடன காட்சி நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் கூறும்போது சம்பந்தப்பட்ட அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.