உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர்

''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர்


'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன், அடுத்ததாக விமல் நாயகனாக நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தை இயக்கியுள்ளார். சாயாதேவி நாயகியாகவும், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இதன் டிரைலரை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இணையத்தில் வெளியிட்டனர்.

விமலின் 34வது படமாக உருவாகியிருக்கும் இப்படம், காதலுக்கு தடையாக நிற்கும் மதங்களை பற்றி கதையாக உருவாகியுள்ளது. சுப்ரமணியபுரம் என்ற ஹிந்து கிராமத்திற்கும், யோக்கோபுரம் என்ற கிறிஸ்தவ கிராமத்திற்கும் இடையே நடக்கும் மோதலையும், அந்த இரு கிராமத்தை சேர்ந்த வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவர் காதலிப்பதும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், பிரச்னைகளே முக்கிய கதையாக இருக்கும் என்பது டிரைலரில் தெரிகிறது.

மதம் மாத்த முயற்சி பண்ணாதீங்க, சர்ச்சுல மாரியம்மன் சிலையை கொண்டுவந்து வச்சிட்டாங்க, அதுக்கப்புறம் மாரியம்மன மேரியம்மனா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க, மதம் மாற்ற முயற்சி பண்றவனும், மதம் மாறுனவனும் சண்டை போட்டுகிட்டு மதக்கலவரம்னு சொல்றீங்க போன்ற சர்ச்சைக்குரிய வசனங்களும், முஸ்லிம் தொப்பியை போட்டிருக்கும் இளைஞர் ஒருவர் கோவிலில் சாமிவந்து ஆடுவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களால் தணிக்கை துறையினர் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில வசனங்கள், காட்சிகளை நீக்க அவர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர், மும்பையில் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். தணிக்கை பணிகள் முடிவடைந்ததும், ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !