கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு
கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். அவரது இந்த பேச்சு, கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தினர். தனது பேச்சுக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் 'அன்பின் மிகுதிக்கு மன்னிப்பு கேட்க முடியாது' என்று கமல் கூறிவிட்டார்.
இந்த நிலையில் கன்னட சினிமா வா்த்தக சபை (சேம்பர்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் நரசிம்மலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கன்னடம் குறித்த நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் அவர் நடித்துள்ள 'தக் லைப்' படத்தை திரையிட தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.