பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் ஏராளமான படங்களை தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். மலையாளத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' படம் 3டியில் வெளியானது. அது போன்ற ஒரு படத்தை தயாரிக்க விரும்பியது தேவர் பிலிம்ஸ். இதற்கான கதையை தேடிய போது கன்னடத்தில் வெளிவந்த 'நம்ம பூமி' என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. 'அன்னை பூமி' என்ற பெயரில் கதை உருவானது.
இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தேவர் பிலிம்ஸ் ரஜினியை கேட்டபோது அவர் உறுதியாக மறுத்து விட்டார். காரணம் 3டி படங்கள் மீது ரஜினிக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. 3டி படங்கள் ஒரு சினிமாவின் ஆன்மாவை குறைத்து விடும் என்று அவர் கருதினார். மக்கள் காட்சிகளைத் தான் ரசிப்பார்கள் கதையை கைவிட்டு விடுவார்கள் என்பது அவரது கருத்தாக இருந்தது. இதன் காரணமாக இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்து விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ரஜினியும் தேவர் பிலிம்சும் பிரிந்ததாக சொல்வார்கள்.
இதனால் தேவர் பிலிம்ஸ் இந்த படத்தின் நாயகனாக விஜய்காந்தை தேர்வு செய்தது. அவருடன் ராதாரவி, நளினி, கவுண்டமணி விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆர்.தியாகராஜன் இயக்கினார், இளையராஜா இசையமைத்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த இந்த படம் தோல்வி அடைந்தது.