உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம்

என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம்


மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‛ஒரு அடார் லவ்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம்பெற்ற ‛மாணிக்க மலராய பூவே' பாடலில் தனது வித்தியாசமான புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து புருவ அழகி என பெயர் பெற்றவர். அதனைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தற்போது அவர் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களில் தமிழில் ‛குட் பேட் அக்லி', சமீபத்தில் ஹிந்தியில் ‛பரம் சுந்தரி' ஆகிய படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா வாரியர் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது தன்னுடைய புகழ் வெளிச்சம் தன்னுடைய குடும்பத்தினரை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் தான் கவனமாக இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து ஒரு நிகழ்வை அவர் கூறும்போது, “என்னுடைய தம்பி என்னுடன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவனை நான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வேன் அப்போதே அவன் என் நிழலின் கீழ் இருப்பதாக நினைப்பான் அதன் பிறகு நான் சினிமாவிற்கு நடிக்க வந்த பிறகு என் தம்பி என்பதாலேயே அவனுக்கு விருப்பம் இல்லாமல் சில கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வற்புறுத்தப்பட்டான். அதிலும் அவனுக்கு சங்கடம் இருந்தது.

தற்போது அவன் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படிக்கிறான். அவனுடைய முதல் நாள் கல்லூரி நுழைவுக்கு நானும் செல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன். ஆனால் அவன் வரவேண்டாம் என்று கூறிவிட்டான். அவ்வளவு ஏன், அந்த கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடந்தபோது அவனுடைய பெயரில் வாரியர் என்று இருப்பதை பார்த்து மலையாளத்தில் இரண்டு நடிகைகள் இந்த பெயரில் இருக்கிறார்களே உங்களுக்கு அவர்களை பெர்சனலாக தெரியுமா என்று கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவன் இல்லை, அவர்களை பர்சனலாக தெரியாது என்று கூறிவிட்டான். இதை என்னிடம் அவன் சொன்னபோது, அப்படி நான் உன் பெயரை தெரியும் என சொல்லி இருந்தால் அந்த கல்லூரியில் எனக்கு கிடைத்த சீட் உன் பெயரால் தான் கிடைத்திருக்கும் என்பது போல் ஆகி விடாதா, அதை நான் விரும்பவில்லை என்று கூறினான், ஒரு பக்கம் அது வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவன் சுயமாக வளர வேண்டும் என நினைப்பதை பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !