உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி

இளையராஜா பாடல்கள் மூலம் சம்பாதித்தது எவ்வளவு? : 'சோனி'யிடம் நீதிமன்றம் கேள்வி

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உரிமம் சோனி நிறுவனத்திடம் உள்ளது. இந்த உரிமத்தை சோனி நிறுவனம் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் எக்கோ நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இதனால் தற்போதைய படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் சோனி நிறுவனத்திடம் உரிமம் பெற்று பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீது இளையராஜா தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வருகிறார்.

சோனி நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 7 ஆயிரத்து 500 திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்து உள்ளேன். என்னுடைய இசைப் பணியை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. எனது இசை படைப்புகள் அனைத்தும் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை.

எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளர் ஆவேன். இதற்கு மற்றவர்கள் எந்த உரிமையும் கோர முடியாது. பல்வேறு ஊடகங்கள் இணையதளங்கள் பல்வேறு நிறுவனங்கள் இசை நிறுவனங்கள் ஆகியவை எனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருகின்றன. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது ஆகும்.

குறிப்பாக சோனி நிறுவனம், அதன் சமூக வலைதள பக்கங்களில் என்னுடைய அனுமதியில்லாமல் என் பாடல்களை மாற்றியும், பல்வேறு வடிவங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை எக்கோ நிறுவனத்திடம் இருந்து இந்த பாடலுக்கான உரிமம் பெற்றதாக சோனி நிறுவனம் கூறினால், எக்கோ நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு அமலில்தான் உள்ளது.

என் பாடல்கள் மீதான உரிமைகளை யாருக்கும் நான் மாற்றித் தரவில்லை. எனவே, சோனி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை மாற்றி அமைக்கவோ, அதனைக் கொண்டு இசைகள் கோர்வைகளை செய்யவோ கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என் பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல்களின் வாதங்களுக்கு பிறகு, இளையராஜா பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்களை சோனி நிறுவனம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், மறுவிசாரணையை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

SANKAR
2025-09-27 12:51:17

what he means by EN PAADAL? he wrote those songs?!