வாசகர்கள் கருத்துகள் (1)
செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியுமா?
வெள்ளையனை எதிர்த்து, வீருநடை போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் சரித்திரத்தை வெள்ளித்திரையில் காவியமாக்கித் தந்த இயக்குநர் பி ஆர் பந்துலுவின் மற்றொரு படைப்பாக வெளிவந்த திரைக்காவியம்தான் “கப்பலோட்டிய தமிழன்”. ஆங்கிலேயக் கம்பெனிகளோடு போட்டிப் போட்டு, கப்பல் கம்பெனி நடத்தி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்காற்றி, அதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு ஆளாகி, சிறை சென்று, செக்கிழுத்து, சித்திரவதைகளுக்குள்ளாகி, செக்கிழுத்த செம்மலாக வாழ்ந்து மறைந்த வ உ சிதம்பரம்பிள்ளையின் வாழ்க்கை சரிதத்தை வெள்ளித்திரையில் ஒரு பாடமாக இயக்குநர் பி ஆர் பந்துலு நமக்குச் சொல்லித் தந்த காவியப் படைப்புதான் இந்த “கப்பலோட்டிய தமிழன்”.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்து, நாட்டின் விடுதலைக்காகப் போராடி, பல இன்னல்களுக்குட்பட்ட தமிழகத்தின் தேசபக்தர்களான வ உ சிதம்பரம்பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுப்ரமணிய சிவா, வாஞ்சி நாதன் போன்ற தேசபக்தர்களை திரையில் காண்பித்து திரைக்கதை அமைத்துத் தந்திருந்தவர் சித்ரா கிருஷ்ணசாமி. படத்திற்கு வசனம் எழுதியவர் எஸ் டி சுந்தரம். ம பொ சிவஞானம் எழுதிய, வ உ சிதம்பரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தினை தயாரித்து இயக்கியிருந்தார் இயக்குநர் பி ஆர் பந்துலு.
சரித்திரக் கதை, அதுவும் சமகால சரித்திரக் கதை என்பதால், படத்தை மிகவும் கவனத்தோடும், சிரத்தையோடும் தயாரித்தார் இயக்குநர் பி ஆர் பந்துலு. வ உ சிதம்பரம்பிள்ளையாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாராக நடிகர் எஸ் வி சுப்பையாவும், சுப்ரமணிய சிவாவாக நடிகர் டி கே சண்முகமும், வாஞ்சி நாதனாக நடிகர் கே பாலாஜியும், மாடசாமியாக நடிகர் ஜெமினிகணேசனும், அவரது காதலி கண்ணம்மாவாக நடிகை சாவித்திரி என அவரவர் கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு அறிந்து மிக அற்புதமான நடிப்பினைத் தந்து, பெரும்பங்காற்றியிருந்தனர்.
குறிப்பாக தனது அபார நடிப்பாற்றலால் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை படம் பார்க்கும் நம் கண் முன் கொண்டு வந்து காட்டியிருப்பார் நடிகர் எஸ் வி சுப்பையா. உரத்த குரலில் வசனம் ஏதும் பேசாமல், உணர்ச்சிகரமான நடிப்பை மட்டுமே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வழங்கி நடித்த திரைப்படமாக வெளிவந்த திரைதப்படம்தான் இந்த “கப்பலோட்டிய தமிழன்”. வ உ சிதம்பரம்பிள்ளையின் கப்பல் கடலிலே வந்து கொண்டிருக்கும்போது, சுப்ரமணிய சிவா உணர்ச்சிவசப்பட்டு பாடுவதாக வரும் “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்; அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்ற பாடலாகட்டும், வ உ சிதம்பரம்பிள்ளை வறுமையில் வாடும்போது பின்னணியில் இசைக்கப்படும் பாடலான “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம், கருகத் திருவுளமோ?” என்ற பாடலாகட்டும், “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?”, “காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என படத்தில் இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அத்தனைப் பாடல்களுக்கும் இனிமையான இசையை வழங்கியிருந்தவர் இசையமைப்பாளர் ஜி ராமனாதன்.
1961ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிந்த இத்திரைப்படத்தைப் பற்றிச் சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால், படத்தைத் தயாரித்தவர், படத்தில் நடித்தவர், படத்தைப் பார்த்தவர் என அனைவரையும் உணர்ச்சிப் பிழம்பில் உறைய வைத்த திரைப்படமாக உருவானதுதான் இந்த “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம். இத்தனைச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருந்தும், வியாபாரக் கலை என்ற உத்தி, விஷம் போல மலிந்து, வியாபித்து, ரசிகர்களின் ரசனையை மலுங்கச் செய்திருந்ததன் காரணமாக படம் வசூலில் வெற்றி பெறாமல் போனது. அதன் பின்பு இரண்டாவது வெளியீட்டில் அரசாங்கத்தால் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அனைவரும் பார்க்க நேர்ந்தபோது ஓரளவு வசூலைப் பெற்றுத் தந்திருந்தது இத்திரைப்படம்.
செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியுமா?