வாசகர்கள் கருத்துகள் (1)
படத் தயாரிப்பு திமுக.... தியேட்டர் ஓனர் திமுக....ஓடிடி ஓனர் திமுக.... கருப்பு பணம் வெள்ளை ஆகிவிட்டது
2025ம் ஆண்டில் 275 படங்கள் வரை தியேட்டர்களில் வெளிவந்தன. அவற்றில் 10 படங்கள் மட்டுமே லாபரகமான படங்களாக அமைந்தன. ஒவ்வொரு முறையும் புது வருடம் பிறக்கும் போது இந்த வருடம் நல்லபடியாக அமையும் என அனைவரும் பிரார்த்தனை செய்வார்கள். சினிமாவிலும் அப்படியான எதிர்பார்ப்பு இருக்கும்.
ஜனநாயகன் சர்ச்சை
இந்த 2026ம் வருடம் ஆரம்பிக்கும் போது நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9 வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. அவரது கடைசி படம் என்பதால் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று யூகித்தார்கள். ஆனால், தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் நீதிமன்ற வழக்கில் படம் இருக்கிறது. இந்த பிப்ரவரி மாதத்திலாவது படம் வெளிவந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பராசக்தி லாபமா... நஷ்டமா...
அதனால், பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட மற்றொரு படமான 'பராசக்தி' படம் பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஹிந்தித் திணிப்பு பற்றிய போராட்டம்தான் கதை என்பதால் அனைத்து ரசிகர்களையும் படம் கவரமுடியாமல் போனது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே என்டர்டெயின்மென்ட் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு சீரியஸான படம் என்பது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. தயாரிப்பு நிறுவனம் 100 கோடி வசூல் என அறிவித்தது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த அதிக வசூல் இல்லை என்பது ஏமாற்றமே. அதேசமயம் படம் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தயாரிப்பு நிறுவனமே சொந்த வெளியீடு செய்தததால் அவர்களுக்குத்தான் லாபமும், நஷ்டமும் சேரும். பாக்ஸ் ஆபீஸில் விசாரித்த வரையில் கலவையான கருத்துக்களைச் சொல்கிறார்கள். சில இடங்களில் லாபம் என்றும், சில இடங்களில் நஷ்டம் என்றும் பதில் கிடைக்கிறது. இருந்தாலும் சாட்டிலைட், ஓடிடி உரிமை, ஆடியோ உரிமை மூலம் படத்திற்காகப் போட்ட முதலீட்டில் 75 சதவீதம் வரையிலும் தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கும் என்கிறார்கள். மீதி 25 சதவீதத் தொகை தியேட்டர் வசூல் வகையில் வந்தால் மட்டுமே படம் லாபம் தரும். அது என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த மற்றொரு படமான கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' படம் எதிர்பாராத விதத்தில் படுதோல்வியை சந்தித்தது. 10 கோடி வசூலைக் கூடப் படம் கடக்கவில்லை என்பது பாக்ஸ் ஆபீஸ் சோகம். கார்த்தியின் தோல்விப் படங்களில் மிக மோசமான தோல்வி இது என்பதுதான் தகவல்.
ஆண்டின் முதல் வெற்றி
பொங்கலுக்கு வந்த மற்றுமொரு படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம்தான் ஜனவரி மாதத்தின் லாபகரமான முதல் படம். சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் 30 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாம். படத்தை வாங்கியவர்களுக்கு குறைந்தபட்ச லாபம் நிச்சயம் கிடைத்திருக்கும். தியேட்டர்களைப் பொறுத்து லாபத்தின் சதவீதம் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாம். இந்த வருடத்தின் உண்மையான முதல் வெற்றி இந்தப் படம்தான். தியேட்டர் வசூல் மூலம் சுமார் 15 கோடி லாபம் என்பது நேற்றைய தகவல். அதோடு ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை மூலம் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக நேரடி வருவாய் கிடைத்திருக்கிறதாம்.
மற்ற படங்களின் தியேட்டர் வருவாய் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை. சில படங்களுக்கு சக்சஸ் மீட் வைத்துக் கொண்டாடினார்கள். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமைகளுக்காக நடத்தப்பட்டவை அவை. அடுத்த பட வாய்ப்புகளும் அதில் கணக்கில் சேரும் என்கிறார்கள். தியேட்டர் மூலம் வரும் வருவாய் காப்பாற்றுவதை விட ஓடிடி, சாட்டிலைட் உரிமை மூலம் வரும் வருவாய் அந்தப் படங்களைக் காப்பாற்றலாம்.
2026ம் ஆண்டின் முதல் மாதத்தில் வந்த 22 படங்களில் ஒரே ஒரு படம் மட்டும்தான் தியேட்டர் வருவாய் மூலம் லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவலாக இருக்கிறது. இருந்தாலும் வரி, இதர செலவுகள் போக அந்த ஒரு படமும் 15 கோடி வரையில் லாபத்தைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விதத்தில் ஒரு படம் 100 கோடி தியேட்டர் வசூலைக் கடந்துள்ளது. இதுதான் 2026ம் ஆண்டின் முதல் மாதத்தின் நிலை.
கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சிறிய படங்கள்தான் லாபத்தைத் தருமா அல்லது, முன்னணி நடிகர்களின் படங்களும் வசூல் சாதனையைப் புரியுமா என்பது வரும் மாதங்களில் தெரிய வரும்.
ஜனவரி 2026ல் வெளியான படங்கள்…
தியேட்டர் வெளியீடுகள்…
ஜனவரி 2 : அனலி, டியர் ரதி, ஜஸ்டிஸ் பார் ஜெனி, காக்கா, மாமகுடம், த பெட்
ஜனவரி 10 : பராசக்தி
ஜனவரி 14 : வா வாத்தியார்
ஜனவரி 15 : தலைவர் தம்பி தலைமையில்
ஜனவரி 23 : திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், ஜாக்கி, மாயபிம்பம், வங்காள விரிகுடா
ஜனவரி 30 : க்ராணி, காந்தி டாக்ஸ், கருப்பு பல்சர், லாக்டவுன், மெல்லிசை, ராட்ட, திரைவி
ஓடிடி வெளியீடுகள்
ஜனவரி 1 : சல்லியர்கள்
ஜனவரி 13 : அனந்தா
படத் தயாரிப்பு திமுக.... தியேட்டர் ஓனர் திமுக....ஓடிடி ஓனர் திமுக.... கருப்பு பணம் வெள்ளை ஆகிவிட்டது