‛லீடர்' ஆக மாறிய ‛லெஜண்ட்' சரவணன்
பிரபல ஜவுளிக் கடை அதிபரான சரவணன், ‛லெஜண்ட்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். விமர்சனங்களை கடந்து அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவானது. தொடர்ந்து அவரின் அடுத்த படத்தை எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், லால், விடிவி கணேஷ், பாகுபலி புகழ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் படத்திற்கு ‛லீடர்' என பெயரிட்டு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். தன் மகளை கடத்தி வைத்துள்ள வில்லன் குழுவிடமிருந்து சரவணன் அதிரடியாக சண்டை போட்டு காப்பாற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதோடு படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாகவும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.