பிளாஷ்பேக்: 'அடிமைப் பெண்' திரைப்படம் தந்த ஓர் அற்புதமான பெண் பின்னணிப் பாடகி
1964ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, 1974ல் வெளிவந்த “திருமாங்கல்யம்” என்ற திரைப்படம் வரை, பத்தே ஆண்டுகளில் பலரும் புருவம் உயர்த்தும் அளவிற்கு 100 திரைப்படங்களைக் கடந்த ஒரு ஆகச் சிறந்த திரைக்கலைஞராகவும், பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்புரி போன்ற நடனக் கலைகளை முறைப்படி கற்றறிந்த சிறந்த நடனக் கலைஞராகவும், இயல்பிலேயே புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் அறியப்படுபவர் ஜெயலலிதா. அவர் நாயகியாக நடித்து வெளிவந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிறப்புமிக்க ஓர் திரைப்படமாக இன்றும் பார்க்கப்பட்டு வரும் ஒரு திரைப்படம்தான் இந்த “அடிமைப் பெண்”.
1969ம் ஆண்டு 'எம் ஜி ஆர் பிக்சர்ஸ்' சார்பில் எம் ஜி ஆரே தயாரித்து, நாயகனாக நடித்து வெளியிட்ட இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன். முன்பு வேறொரு படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதா, பொழுதுபோக்கிற்காக ஏதோ ஒரு பாடலை அவர் முணுமுணுத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட எம் ஜி ஆர், தனது 'அடிமைப் பெண்' திரைப்படத்தின் இசையமைப்பாளரான கே வி மகாதேவனை அழைத்து, இந்தப் படத்தின் கதாநாயகியை அவரது சொந்தக் குரலிலேயே ஒரு பாட்டு பாட வைக்கலாம் என நினைக்கின்றேன் என்ற தனது விருப்பத்தை அவரிடம் சொல்ல, அங்கே உருவானது “அம்மா என்றால் அன்பு” என்ற அந்தப் பாடலுக்கான ஆரம்பம்.
பின்னர் படத்தின் நாயகியான ஜெயலலிதாவை வரவழைத்து, இந்தப் பாடலைப் பாடும்படி சொல்ல, அவரோ தனக்குப் பாட வராது என்று அவர்களிடம் வாதிட, இசையமைப்பாளர் கே வி மகாதேவன் முதலில் நீங்கள் பாடுங்கள் பின்னர் பார்ப்போம் எனக் கூறி, அவர் மெட்டமைத்து வைத்திருந்த “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை அவருக்குப் பாடிக்காட்டி, அதன்பின் அவரையும் பாடச் செய்திருக்கின்றார்.
மைக் இல்லாமலேயே அந்தப் பாட்டை ஜெயலலிதா இனிமையாகப் பாடியதைக் கேட்ட இசையமைப்பாளர் கே வி மகாதேவன், ஜெயலலிதாவின் குரலிலேயே அந்தப் பாடலைப் பதிவும் செய்தார். ஜெயலலிதா என்ற அந்தப் பல்துறை வித்தகரின் திறமைகளில் பின்னணிப் பாடகி என்ற மேலும் ஓர் திறமை இணைய காரணமாயிருந்த ஒரு திரைப்படமாக அமைந்ததுதான் இந்த “அடிமைப் பெண்”.