முருகன் பாடலை விஜய் உடன் ஒப்பிட்டு பாடிய சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பாடகர் வேல் முருகன்
சென்னையில் நடந்த த.வெ.க., மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடவுள் முருகன் பாடலை திரித்து விஜய் உடன் ஒப்பிட்டு பாடகர் வேல்முருகன் பாடியதாக சர்ச்சை எழுந்தது. முருகனை இழிவுபடுத்திய வேல்முருகன் மற்றும் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் மனு அளித்தார். மேலும் சில ஊர்களில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விஷயம் சர்ச்சையாக வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛அந்த இடத்தில் தானாக தோன்றிய வரியை சேர்த்து பாடினேன். யார் சொல்லியும் பாடவில்லை, தெரியாமல் நடந்தது. முருகனின் அடிமையாக இருக்கிறேன். நான் போய் அவமானப்படுத்துவேனா. இருப்பினும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது'' என்றார் வேல்முருகன்.