துாய்மை பணியாளர் பத்மாவுக்கு பட்டுப்புடவை பரிசளித்து பாதபூஜை செய்த நடிகர் பார்த்திபன்
தான் கண்டெடுத்த 45 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் தனது வீட்டுக்கு அழைத்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்தார் ரஜினிகாந்த். நடிகர் பார்த்திபனோ தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து சென்று கவுரவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்த்திபன், சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று தோன்றியது திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை இந்த நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எத்திராஜ் கல்லூரியின் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தார்.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில் அவருக்கு புதிய காலணிகளையும், புடவையையும் வழங்கி அவரிடம் ஆசி பெற்றேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் நினைவில் நிற்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.