இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல்
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தனர். தனுஷ் அவரது வேடத்தில் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தின் அறிமுக விழாவில் இளையராஜா, கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின் அந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை.
தயாரிப்பாளர் மாற்றம் உள்ளிட்ட சில பிரச்னைகளால் படம் துவங்கவில்லை. ஒருக்கட்டத்தில் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‛டிசி' படத்தை இயக்க போய்விட்டார். தனுஷும் அடுத்தடுத்து வேறு படங்களில் நடிப்பதால் இந்த படம் டிராப் என்று கூட தகவல் வந்தது. தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக செய்தி பரவியது.
இந்நிலையில் இந்தபடம் தொடர்பாக படக்குழு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛இளையராஜா பயோபிக் படம் கைவிடப்பட்டதாகவும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் விலகியதாகவும் வரும் செய்தி உண்மையல்ல. லோகேஷின் டிசி படம் வெளியானதும், இப்பட பணிகளை அருண் மாதேஸ்வரேன் துவக்குகிறார். விரைவில் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் வெளியாகும்'' என தெரிவித்துள்ளனர்.