விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் நீண்ட நாளைக்கு பிறகு தனது இயக்குனர் தொப்பியை அணிந்து கொண்டு தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள சீதா பயணம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க, நிரஞ்சன் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான விஸ்வக் சென் என்பவர் தான். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே அர்ஜுனுக்கும் விஸ்வக் சென்னுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகினார்.
இப்போது சீதா பயணம் படம் வெளியாகி உள்ள நிலையில் அர்ஜுன் அளித்த பேட்டி ஒன்றில், “விஸ்வக் சென்-ஐ தான் இந்த கதாபாத்திரத்திற்கு தீர்மானித்திருந்தோம். சொல்லப்போனால் அவரை மனதில் வைத்து தான் காட்சிகளையும் உருவாக்கி இருந்தேன். ஆனால் சில நேரங்களில் நாம் திட்டமிட்டது போல நடந்து விடுவது இல்லையே. அதன் பிறகு தான் நிரஞ்சன் இந்த படத்திற்கு வந்தார்.
ஆனாலும் கதையில், காட்சியில் ஒரு சிறிய மாற்றத்தை கூட செய்யவில்லை. இப்போது எனக்கும் விஸ்வக் சென்னுக்கும் எந்த விதமான பிரச்னையும் இல்லை. எல்லாமே செட்டில் ஆகிவிட்டது. வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல தானே. அதனால் யாருடனும் எந்த வருத்தமும் கோபமும் இல்லை. எதிர்காலத்தில் சூழல் நன்றாக இருந்தால் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.