பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ்
பொதுவாகவே நம் இந்திய கலாச்சாரத்தின் படி, பெரும்பான்மையான நம் மக்கள், ஒரு நற்செயலையோ அல்லது நற்காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், காலம் பார்த்து, பூஜை புனஸ்காரங்களோடு அவற்றை ஆரம்பிப்பது என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு இயல்பான பழக்க வழக்கமே. அதிலும் கோடிக்கணக்கான பணம் புரளும் சினிமா போன்ற பெரும் முதலீட்டுத் துறைகளில் இந்த வழிமுறைகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு கடைபிடித்து வருவது என்பது அனைவரும் அறிந்ததே.
படத்தில் இடம் பெறும் பாடல்களில் கூட அறச்சொல் ஏதும் பாடிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வரும் இந்த சினிமா உலகில், படத்திற்கான தலைப்பை தெரிவு செய்வதிலும் நேர்மறை சிந்தனையோடு கூடிய ஒரு உற்சாகமிகு வார்த்தையையே தங்களது படங்களின் தலைப்பாக வைக்கத்தான் விரும்புவர். இப்படிப்பட்ட சினிமா துறையில் 1970களின் பிற்பகுதியில், ஒரு புதுமுக இயக்குநராக அறிமுகமாகி, துளிர்விடும் நேரத்தில் தனது முதல் படைப்புக்கான படத்தின் தலைப்பை ஒரு எதிர்மறை எண்ணம் மேலோங்கும் வண்ணமாக அமைத்து, அதை வெற்றிப்படமாகவும் பதிவு செய்த ஒரு அசாத்திய சாதனை இயக்குநரைப் பற்றிய பதிவுதான் இது.
இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர்களில் ஒருவரான இயக்குநர் கே பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமான ஒரு திரைப்படம்தான் “சுவரில்லாத சித்திரங்கள்”. 1979ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி அவரே இயக்கியிருந்ததோடு, ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருப்பார். தனது முதல் பட வாய்ப்பான இத்திரைப்படத்தின் தலைப்பை “சுவரில்லாத சித்திரங்கள்” என ஒரு எதிர்மறை சிந்தனையை உணர்த்தும் விதமாகவே துணிச்சலுடன் வைத்திருப்பார்.
இந்தப் படத்தின் கதைக்கு வெகு பொறுத்தமான தலைப்பாக இது இருந்தாலும், திரைத்துறையைச் சார்ந்த பெரும்பாலானோர் இப்படிப்பட்ட தலைப்பை வைப்பதற்கு சற்று தயங்கத்தான் செய்வர். அதிலும் முதல் பட வாய்ப்பு எனும் போது படத்தின் தலைப்பு விவகாரத்தில் இன்னும் அதிகப்படியான எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட்டிருப்பர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தனது கதை, திரைக்கதையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர் கே பாக்யராஜ், இந்த தலைப்பையே தனது முதல் பட தலைப்பாக வைத்து வெற்றியும் கண்டிருந்ததை எண்ணும்போது, அவர் இத்துறையின் மீது வைத்திருந்த ஈர்ப்பும், தனது திறமையின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் காரணம் என்றால் அது மிகையன்று.
“சுவரில்லாத சித்திரங்கள்” திரைப்படத்தைத் தொடர்ந்து அவரது இரண்டாவது படைப்பாக வெளிவந்த திரைப்படத்திற்கும் இதே போன்று “ஒரு கை ஓசை” என ஒரு எதிர்மறையான தலைப்பையே தேர்ந்தெடுத்து வைத்திருப்பார். இதோடு நின்றுவிடாமல் தனது அடுத்தடுத்த படைப்புகளான “மௌன கீதங்கள்”, “விடியும் வரை காத்திரு”, “தூரல் நின்னு போச்சு” போன்ற திரைப்படங்களின் தலைப்புகளும் எதிர்மறை சிந்தனையைத் உணர்த்தும் வண்ணமாகவே அமைக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமான ஒன்றுதான்.
அவைகளில் “சுவரில்லாத சித்திரங்கள்”, “மௌன கீதங்கள்”, “தூரல் நின்னு போச்சு” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை அவருக்கு தேடித் தந்த திரைப்படங்களாகவும், “ஒரு கை ஓசை”, “விடியும் வரை காத்திரு” ஆகிய திரைப்படங்கள் அவரது இயக்கத்திற்கு புகழைத் தேடித் தந்த திரைப்படங்களாகவும் அமைந்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கையில், சினிமா துறையில் இதுபோன்ற நம்பிக்கை சார்ந்த சில விசயங்களை தனது ஆரம்பகால திரைப்பயணத்தின் போதே கடைபிடிக்காமல் பயணித்து, இன்று 50 ஆண்டுகால கலையுலகப் பயணத்தையும் நிறைவு செய்து, இன்றும் ஒரு திரை ஆளுமையாக நிலைத்து நிற்கும் இயக்குநர் கே பாக்கியராஜ், தமிழ் திரையுலகிற்கே கிடைத்த ஒரு பொக்கிஷம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.