உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர்

பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர்

கவர்ச்சி நடனத்திற்கென்றே நடிகைகள் இருந்தது இந்திய சினிமாவில்தான். 1980களில் தமிழில் சில்க் ஸ்மிதா அனுராதா, டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி, மாயா, ஜோதிலட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் இருந்தனர். ஆனால் இவர்களுக்கு முன்பே 1960-1980 காலகட்டத்தில் பாலிவுட்டில் நடனத்தால் கொடிகட்டி பறந்தவர் ஹெலன் என்ற ஹெலன் ஜைராக் ரிச்சர்ட்சன் கான். 750 படங்களுக்கு மேல் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

”காபரே குயின்” அழைக்கப்பட்ட இவர் ஆடாத இந்தி படங்கள் வெளி வராது என்ற ஒரு காலம் இருந்தது. ஹெலன் நடனம் இருந்தால் அந்தப் படத்திற்கு தனி மார்க்கெட்டும் இருந்தது. மேற்கத்திய கவர்ச்சி நடனத்தை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய வரும் ஹெலன்தான். தமிழிலும் சங்கே முழங்கு, பாக்தாத் திருடன், மர்ம வீரன், பக்த ராவணா , மாய மனிதன், உத்தம புத்திரன், நான் சொல்லும் ரகசியம், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற பல படங்களில் நடனம் ஆடியுள்ளார். பெரும்பாலும் ஹெலனின் நடனத்திற்கு பாடல் பாடியவர், ஆஷா போன்ஸ்லே.

ஒரு ஆங்கிலோ இந்தியன் தந்தைக்கும் பர்மாவைச் சேர்ந்த தாய்க்கும் பர்மாவில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போரின்போது தந்தை இறந்து விட்டதால் இவரது குடும்பம் 1943ம் ஆண்டு பம்பாய்க்குக் குடிபெயர்ந்தது. குடும்ப வறுமையை போக்க 19வது வயதில் பாலிவுட் சினிமாவில் குரூப் டான்சராக அறிமுகமானார்.

1957ல் வெளிவந்த “ஹவுரா பிரிட்ஜ்” என்ற படத்தில் இடம்பெற்ற இவரது நடனம் மூலம் புகழ்பெற்றார். 'ஷோலே' படத்தில் இவர் ஆடிய நடனம் இப்போதும் ரசிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !