'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'சர்வம் மாயா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரியா சிபு நடித்திருந்தார் அதற்கு முன்னதாக அவர் 2024ல் 'கப்' என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட இந்த 'சர்வம் மாயா' திரைப்படம் தான் அவருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளரும் தமிழில் 'புலி, இருமுகன், வீர தீர சூரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவருமான சிபு தமீன் என்பவரின் மகள்தான். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு பல பிரபலங்களிடமிருந்தும் கூட பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, ஜோதிகா இருவர் சார்பாக ரியா சிபுவுக்கு பரிசுப்பொருள் ஒன்றும் கூடவே அவரது நடிப்புக்கு பாராட்டு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடித்ததில், “சர்வம் மாயா படத்தில் உங்களுடைய நடிப்பை பார்த்து ரசித்தோம்.. ரொம்பவே இயல்பாக, தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, அதே சமயம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிகப்பெரிய பாராட்டுகளும் மற்றும் இன்னும் வெற்றிகளை தொடர எங்களது வாழ்த்துக்களும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசுப் பொருளையும் பாராட்டு கடிதத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரியா சிபு.