பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல்
'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தில் வரும் ”வீரா ராஜ வீரா” பாடல் என்பது தனது தந்தை மற்றும் உறவினர் ஆகியோர் இயற்றிய 'சிவா ஸ்துதி' என்ற பாடல் ஆகும். எனவே அதற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பாரம்பரிய இசைக்கலைஞர் ஜாஹிருதீன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வழக்கு தொடர்ந்தார்.
தனிநீதிபதி விசாரணையில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஜாஹிருதீன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் தாகர் சகோதரர்களுக்கு கிரெடிட் கொடுப்பது தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் கொடுத்த யோசனையை ஏற்கிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டடது.
இதை தொடர்ந்து “இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரையில், இடைக்கால ஏற்பாடாக அனைத்து ஓ.டி.டி மற்றும் ஆன்லைன் தளங்களிலும், 'வீரா ராஜ வீரா' பாடலுக்கு தாகர் சகோதரர்களின் பெயர்களை கிரெடிட் ஆக வழங்க வேண்டும். இதனை 5 வாரத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவு நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமைகள் வழக்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காப்பிரைட் வழக்கு தொடர்ந்து நடக்கும் என்றும், பாடலின் மூலம் பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியை ஏ.ஆர்.ரஹ்மான் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டியது வரும் என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.