யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினி, கமல். இருவரும் ஆரம்பத்தில் ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர். கடைசியாக ‛அலாவுதீனும் அற்புதவிளக்கும்' படத்தில் நடித்தனர். அதன்பின் தனித்தனியாக பயணிக்க தொடங்கி 50 ஆண்டுகளை கடந்து தற்போது வரை டாப் நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.
சில ஆண்டுகளாக இவர்களை மீண்டும் இணைந்து நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. சமீபத்தில் இருவரும் ஒன்றாக நடிப்பது முடிவானது. ஆனாலும் இயக்குனர் தேர்வில் இழுபறி நீடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக செய்தி பரவியது. இறுதியாக ‛டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்க முடிவானது. இவர்களின் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு வீடியோ இன்று(பிப்., 21) மதியம் 12:07 மணியளவில் வெளியிடப்பட்டது.
நெல்சனின் வழக்கமான கலகலப்பான வீடியோவாக இது வெளியாகி உள்ளது. அதில், படத்தை இயக்கும் நெல்சன் ஓட்டல் அறை லாபியில் வெளியே நின்று கொண்டு ரஜினி, கமல்... யாருடைய அறைக்கு முதலில் செல்வது என யோசிக்கிறார். அங்கு வரும் அனிருத்... இரு ராகங்கள் பெயரை சொல்லி ரெண்டு விரலில் ஒண்ண தொடுங்க என கூற, அதை டெக்னிக்கை நெல்சனும் பாலோ செய்து முதலில் கமல் அறைக்கு செல்கிறார்.
ரஜினி, கமல் இருவர் அணியும் உடை, வாட்ச், ஷூ, கூலர் ஆகியவற்றை மாறி மாறி எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் ஒரு கார் கேரேஜிற்குள் இருவரும் செல்கின்றனர். அங்கே அழகிகள் கார்களை பராமரிக்கின்றனர். கார் சாவியை ரஜினி ஸ்டைலாக தூக்கி போட அதை கமல் கேட்ச் செய்து பழைய டைப் பென்ஸ் காரில் அமருகின்றனர். பின் சீட்டில் நெல்சன், அனிருத் அமர்ந்து கொள்கின்றனர்.
‛பீத்தோவன் - பப்பி லஹரி'-யை மிக்ஸ் பண்ணி ஒரு தீம் மியூசிக் ரெடியா இருக்கு, அதை முதலில் கேட்கலாமா என கமல், ரஜினியிடம் அனிருத் கேட்கிறார். அதற்கு கமல், ‛அத அப்புறம் கேட்போம், முதலில் யாரு ஹீரோ' என கேட்கிறார். ரஜினியும், ‛கேக்குறார்ள சொல்லுங்க ஜி யாரு ஹீரோ...' என நெல்சனிடம் கேட்க, கமல் வேகமாக காரை இயக்கும் காட்சி உடன் வீடியோ முடிகிறது.
நெல்சனின் வழக்கமான கலகலப்பான அறிமுக வீடியோவாக இது இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.