பிளாஷ்பேக்: சிவாஜிக்கு அதிக வெற்றிகளை அள்ளி வழங்கிய 1972ம் ஆண்டு
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் அன்றைய முன்னணிக் கதாநாயக நடிகர்களும், அதற்குப் பின்பு வந்த கதாநாயக நடிகர்களும் நடித்து படங்களை வெளியிட்டிருக்கின்றனர். அவற்றில் சில வெற்றியும், பல தோல்வியும் அடைந்திருக்கின்றன. குறிப்பாக 1966ம் ஆண்டில் எம் ஜி ஆரின் 9 திரைப்படங்கள் வெளிவந்து, அவற்றில் “அன்பே வா”, “முகராசி”, “பெற்றால்தான் பிள்ளையா” என்ற மூன்று திரைப்படங்கள் மட்டும்தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களாக அவருக்கு அமைந்திருந்தது.
அதுபோல் பின்னாளில் வந்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் என பலர் ஒரே ஆண்டில் 15லிருந்து 20 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கின்றனர். அவர்களுக்கும் இதுபோலவே பல தோல்விப் படங்களாகவும், சில வெற்றித் திரைப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்து, ஏறக்குறைய நடித்த அத்தனை திரைப்படங்களையும் வெற்றித் திரைப்படங்களாக்கித் தந்திருக்கின்றார் ஒரு நடிகர் என்றால், அவர் வேறு யாருமல்ல நடிகர் சிவாஜிகணேசன்தான்.
1960 கால கட்டங்களில் கூட, ஒரே ஆண்டில் இவர் ஒன்பது அல்லது பத்து திரைப்படங்கள் வரை நடித்து, அவற்றில் பெருவாரியான வெற்றித் திரைப்படங்களைத் தந்து, சாதனை புரிந்திருந்தாலும், விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 1972ம் ஆண்டு என்பது நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஒரு அதிர்ஷ்டமான ஆண்டாகவே அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று. இந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. இவற்றில் ஒரே ஒரு திரைப்படத்தைத் தவிர மற்ற ஆறு திரைப்படங்களும் இவருக்கு அதிரி புதிரி வெற்றியைப் பெற்றுத் தந்த திரைப்படங்களாகவே அமைந்திருந்தது.
ராஜா
1972ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் “ராஜா”. “ஜானி மேரா நாம்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் வடிவமான இத்திரைப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜி தயாரித்திருந்தார். சிவாஜிகணேசனுடன் ஜெயலலிதா, கே பாலாஜி, பண்டரிபாய், எஸ் வி ரங்காராவ், ஆர் எஸ் மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், காந்திமதி, வி எஸ் ராகவன் என பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்கியிருந்தவர் இயக்குநர் சி வி ராஜேந்திரன். நகைச்சுவை நடிகர் மறைந்த ஜே பி சந்திரபாபு மூன்று வேடங்களில் தோன்றி நடித்திருந்த இத்திரைப்படம், 1972 ஜனவரி 26 அன்று வெளிவந்து, பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
ஞான ஒளி
சிவாஜிகணேசனின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பி மாதவன் இயக்கிய திரைப்படம்தான் இந்த “ஞான ஒளி”. விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், வி கே ராமசாமி, மனோரமா, எம் ஆர் ஆர் வாசு, ஜெய கவுசல்யா ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ஆண்டனி, அருண் என்ற இரண்டு விதமான பாத்திரங்களில் தோன்றி, தனது அபார நடிப்பை வழங்கி, படத்தின் வெற்றியை உறுதி செய்தவர் சிவாஜிகணேசன். 1972 மார்ச் 11 அன்று வெளிவந்த இத்திரைப்படமும் திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடி, ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது நடிகர் சிவாஜிகணேசனுக்கு.
பட்டிக்காடா பட்டணமா
மேல்நாட்டு மோகத்திற்கும், நம் நாட்டு பண்பாட்டிற்கும் இடையே நடக்கும் ஒரு குடும்பப் போராட்டக் கதைதான் இந்த “பட்டிக்காடா பட்டணமா” படக் கதை. நம் நாட்டுப் பண்பாட்டு நாயகனாக சிவாஜிகணேசனும், மேல் நாட்டு மோகத்தில் மூழ்கிய நவநாகரீக மங்கையாக ஜெயலலிதாவும் போட்டி போட்டு நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்கியிருந்ததோடு, படத்தை தயாரித்திருந்தார் இயக்குநர் பி மாதவன். 1972ம் ஆண்டு மே 6 அன்று வெளிவந்த இத்திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடிக்க, படம் 175 நாட்கள் வரை ஓடி, வெள்ளி விழா கண்டது.
தவப்புதல்வன்
இரவில் மட்டும் பார்க்கும் திறனற்ற, பார்வைக் குறைபாடுள்ள இளைஞன் கதாபாத்திரமேற்று சிவாஜிகணேசன் நடித்திருந்த திரைப்படம்தான் இந்த “தவப்புதல்வன்”. “நிறைகுடம்”, “அருணோதயம்”, “அன்பைத் தேடி”, “அந்தமான் காதலி”, “இமயம்”, “கீழ்வானம் சிவக்கும்”, “பரீட்சைக்கு நேரமாச்சு” போன்ற பல சிவாஜி திரைப்படங்களை இயக்கிய முக்தா வி சீனிவாசன்தான் இந்தத் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். கே ஆர் விஜயா, பண்டரிபாய், வி கோபாலகிருஷ்ணன், சி ஐ டி சகுந்தலா, எம் ஆர் ஆர் வாசு, சோ, மனோரமா, செந்தாமரை, காந்திமதி ஆகியோரது நடிப்பில், 1972 ஆகஸ்ட் 26 அன்று வெளிவந்த இந்தத் திரைப்படமும் சிவாஜிகணேசனுக்கு ஒரு 100 நாள் திரைப்படமாகவே அமைந்திருந்தது.
வசந்த மாளிகை
ஏ நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடித்து, பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “பிரேம நகர்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் “வசந்த மாளிகை”. தெலுங்கு திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் கே எஸ் பிரகாஷ் ராவ்தான் தமிழ் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நாயகியாக நடிகை வாணிஸ்ரீயே நடித்திருந்தது போல், இரு மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தவர் திரையிசைத் திலகம் கே வி மகாதேவன். சிவாஜிகணேசன் நாயகனாக நடித்து, 1972 செப்டம்பர் 29 அன்று வெளிவந்த இந்தத் திரைப்படம், 750 நாட்கள் வரை ஓடி, வசூலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி, சிவாஜியின் கல்ட் அந்தஸ்தைப் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஓர் திரைப்படமானது இந்த “வசந்த மாளிகை”.
நீதி
1972ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த சிவாஜி திரைப்படம்தான் இந்த “நீதி”. 1971ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, மீனா குமாரி, மும்தாஜ் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த “துஷ்மன்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாக தமிழில் வெளிவந்த இந்த “நீதி” திரைப்படத்தையும் தயாரித்திருந்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜி. சிவாஜியோடு இணைந்து ஜெயலலிதா, சௌகார் ஜானகி, ஆர் எஸ் மனோகர், எஸ் வி சுப்பையா, காந்திமதி, மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, எம் ஆர் ஆர் வாசு, சந்திரபாபு, ஜெய கௌசல்யா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படம் 1972 டிசம்பர் 7 அன்று வெளிவந்து, வசூல் ரீதியாக ஒரு பெரிய வெற்றிப் படமாகவே அமைந்திருந்தது சிவாஜிகணேசனுக்கு.
அந்த ஆண்டில் வெளிவந்த சிவாஜி திரைப்படங்களில் தோல்வி கண்ட ஒரே ஒரு திரைப்படம் என்றால் அது இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தர்மம் எங்கே” என்ற திரைப்படம் மட்டுமே. மொத்தத்தில் எண்ணிக்கை அடிப்படையிலும், விகிதாச்சார அடிப்படையிலும் அதிகப்படியான வெற்றித் திரைப்படங்களை சிவாஜிக்கு அள்ளி வழங்கிய ஓர் அதிர்ஷ்ட ஆண்டாகவே அமைந்திருந்தது இந்த 1972 என்பதில் எந்த ஐயமும் இல்லை.