உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா சங்கங்கள் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா

சினிமா சங்கங்கள் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா

சென்னை தி.நகர் தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சங்கத் தலைவர் ஜி.கே.எம் தமிழ்குமரன், ஐசரி கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.தாணு , சத்யஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சங்க தலைவர் தமிழ்குமரன் கூறியது, ‛‛தமிழ் திரைப்பட சங்கத்தின் முன்னாள் தலைவர்களை அழைத்து சங்க வளர்ச்சி குறித்து கலந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 2015 முதல் 2022ம் ஆண்டு வரை 224 திரைப்படங்களை தேர்வு செய்து மானியம் வழங்கும் வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதனை உடனடியாக ஏற்று அரசு மானியம் வழங்கியுள்ளது அதற்கு தமிழக அரசுக்கு எங்களுடைய நன்றி.

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம், உடனடியாக அதனை நிறைவேற்றி தந்த அவருக்கும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கியதால் நிறைய திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய திரையரங்குகளில் சின்ன படங்களை திரையிடுவதில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் அது தற்பொழுது மாறியுள்ளது, சினிமா துறையில் இருந்து சென்றதால் எங்கள் கஷ்டம் அவருக்கு தெரியும்.

8 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மானியத்தை தீபாவளிக்கு முன்பாக முதல்வர் வழங்கியது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமையில் நிறைய தயாரிப்பாளர் இருந்தனர். மானியம் வந்தது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் சினிமா நகரம் உருவாக்குவதற்காக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தவிர மூத்த தயாரிப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விழா ஒன்றை நடத்த உள்ளோம். இவ்வளவு சலுகைகள் கொடுத்த முதல்வருக்கு அனைத்து சினிமா சங்கம் சார்பில் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !