அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...?
ஒரு காலத்தில் புதிய திரைப்படங்களுடன், பழைய திரைப்படங்களும் தியேட்டர்களில் திரையிடப்படுவது வாடிக்கையாக இருந்தது. பழைய படங்களை திரையிடுவதற்கென்றே சில தியேட்டர்கள் இருந்ததும் உண்டு. அப்போதெல்லாம் அவற்றை 'ரீ ரன்' தியேட்டர்கள் என்றும், 'ரீ ரன்' படங்கள் என்றும் அழைப்பார்கள். இப்போது அவை 'ரீ ரிலீஸ்' என மாறிவிட்டன.
பிரிண்ட் மூலம் திரைப்படங்கள் திரையிடப்பட்டது அழிந்து, டிஜிட்டல் திரையிடல் வந்த பிறகு இந்த 'ரீ ரிலீஸ்' என்பது இல்லாமல் போனது. அதன்பின் சில முக்கியமான பழைய படங்களை டிஜிட்டல் தரத்திற்கு மாற்றி, அவற்றின் ஒலி அமைப்பை இன்றைய தொழில்நுட்பத்திற்கும் மாற்றி திரையிட ஆரம்பித்தார்கள்.
'கர்ணன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற பழைய கிளாசிக் படங்கள் அப்படி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. பின்னர் 2 கே வருடங்களில் வெளியான படங்களை டிஜிட்டல் தரத்திற்கு மாற்றி வெளியிட ஆரம்பித்தார்கள். ஓரிரு வருடங்களாக இது பரவலாகி தற்போது ஒரு டிரெண்ட் ஆக மாறிவிட்டது.
சென்னையில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் ஒரு தியேட்டரில் ஒரே ஒரு காட்சியாக 1000 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 'பாட்ஷா, கில்லி, படையப்பா, மங்காத்தா' உள்ளிட்ட படங்களும் ரீ ரிலீஸில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுத் தந்துள்ளன.
கடந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு, 'காதலர் தினம், மின்னலே, மௌனம் பேசியதே, உயிருள்ளவரை உஷா' உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆகின.
இந்த வாரம் 'கில்லி, மெர்சல், துணிவு, சூது கவ்வும்' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. இவற்றோடு 'அறிவான், லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், எம்ஜி 24, மை டியர் டாலி, சிவ சம்போ' ஆகிய புதிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள். இவற்றிற்கு ரசிகர்கள் வருவதை விட ரீ ரிலீஸ் படங்களுக்குக் கூடுதலாக ரசிகர்கள் வருவார்கள். சமீப காலங்களில் இப்படி வந்த படங்கள்தான் இதற்கு உதாரணம்.
பல சிங்கிள் தியேட்டர்கள் சிறிய படங்களைத் திரையிடத் தயங்குகிறார்கள். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டும்தான் இம்மாதிரியான படங்களுக்குக் கிடைக்கின்றன. ரீ ரிலீஸ் படங்களை வேறு வழியில்லாமல் சில சிங்கிள் தியேட்டர்களில் வெளியடுகிறார்கள். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், தியேட்டர்களை நிர்வாகம் செய்வதற்குமாவது இந்த படங்கள் தங்களுக்கு உதவுகிறது என்று சொல்கிறார்கள்.
அதேசமயம் மற்றொருபுறம் பழை படங்கள் ரீ ரிலீஸ் ஆவதால் புதிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு சிக்கல் இருப்பதாக திரையுலகினர் பேச துவங்கி உள்ளனர். ஏற்கனவே சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதே குதிரை கொம்பமாக உள்ளது. அவற்றிலும் ரீ ரிலீஸ் படங்கள் ஆக்கிரமித்து கொண்டால் நாங்கள் என்ன செய்வது பல சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பல விழாக்களில் பேசுவதை காண முடிகிறது.
புதிய படங்கள் வெளியிடுவதற்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, ரீ ரிலீஸ் படங்கள் வெளியவாதற்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இவற்றைத் திரையுலகினர் சரி செய்ய வேண்டும் என்று முக்கிய சங்கங்களில் பொறுப்பில் உள்ளவர்கள் கூட குரல் கொடுக்கிறார்கள். ஆனால், எந்த சங்கத்திலும் இது குறித்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதில்லை.
தமிழகத்தில் தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகி உள்ளன. விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஓரிரு படங்களின் வெளியீடு பற்றி அறிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களுக்கும் புதிய படங்கள் தேவைப்படும். மாநகராட்சிகளில் 50 தியேட்டர்களும், நகராட்சிகளில் 10க்கும் குறைவான தியேட்டர்களும் இருக்கும். இதர சிறிய ஊர்களில் 5க்கும் குறைவான தியேட்டர்கள் இருக்கும். இவ்வளவு தியேட்டர்களுக்கும் சரியான 'தீனி' ஆக அடுத்த சில மாதங்களுக்குப் படங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
மிக விரைவில் இது குறித்து ஒரு முடிவெடுத்தால் மட்டுமே தமிழ்த் திரையுலகத்தைக் காப்பாற்ற முடியும். யார் இதை செய்யப் போகிறார்கள்?