ஏ படத்திற்கு 45 இடத்தில் கட்
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்துள்ள படம் 'ஏ படம்' (படத்தின் தலைப்பே இதுதான் ). கேஸ்ட்லெஸ் ஷிவாகோ இயக்கி உள்ளார். வரும் ஏப்ரல் 27ம் தேதி திரைக்கு வருகிறது. படத்திற்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார்.
ராஜ கணபதி, மேகா, சந்திரபோஸ், கேஷ்லெஸ் ஷிவாகோ, அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் 45 இடத்தில் கட் கொடுத்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறும்போது விவசாய புரட்சியையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக இந்த 'ஏ படம்' பதிவு செய்துள்ளது. சென்னை, ஏலகிரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கும்போது 45க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கு 'கட்' கொடுத்தனர். இதனால் 18 மாதங்கள் வரை கோர்ட்டுக்கு அலைந்து, மிகவும் சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் வாங்கினோம். இதில் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன். சமுதாயத்திலுள்ள அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் காட்சிகள் உள்ளது. அதுவே தணிக்கை குழுவிற்கான பிரச்னையானது என்றார்.