உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு

நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சி துவங்கி வரக்கூடிய சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளார். இதற்கிடையே விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சில காலமாக செய்தி பரவியது. இதற்கு யாரும் விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த மனுவில், 'எனது கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021 முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார். அவருடன் வெளிநாடு செல்கிறார், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அது எனக்கு அவமானத்தை தருகிறது.

2021 முதல் தன்னுடைய திருமண, சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக விலக்கி வைத்துவிட்டார். ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். தற்போது 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் குழந்தைகளையும் விஜய் கவனித்துக்கொள்ளவில்லை. அவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகளும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். அனைத்து தரப்பினரின் மதிப்பை கருத்தில் கொண்டு நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்படும் பட்சத்தில் அந்த நடிகையின் பெயரை 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, ஏப்.,20ம் தேதி, வழக்கறிஞர் இல்லாமல் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

தமிழ் பெண்ணான சங்கீதா, நடிகர் விஜயை 1999ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது நிச்சயதார்த்தம் லண்டனிலும், திருமணம் சென்னையிலும் நடைபெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் பிரிய முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள விஜய்க்கு இந்த விவாகரத்து வழக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !