அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு
இன்றைய சமூக வலைத்தளங்களில் இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோருக்கு பல மில்லியன் பாலோயர்கள் அதில் இருக்கிறார்கள்.
யு டியுப் வீடியோக்கள் என்றால் பார்வைகள் மூலம் மக்களிடம் சென்று சேர்வது கணக்கிடுவதைப் போல இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பதிவுக்குக் கிடைக்கும் லைக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்பாக இந்தியப் பிரபலங்கள் பதிவிட்ட பதிவுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2024ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையுடன் பதிவிட்ட புகைப்படத்திற்கு 22 மில்லியன் லைக்குகள் கிடைத்தது. அது ஆசிய அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்தது.
அந்த சாதனையைத் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமணப் புகைப்படப் பதிவு முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை பதிவிடப்பட்ட அந்தப் பதிவு அதற்குள்ளாக 24 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது. அதே புகைப்படங்களைப் பதிவிட்ட அவரது கணவர் விஜய் தேவரகொண்டாவின் பதிவிற்கு 18 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.
விராட் கோலிக்கு இன்ஸ்டா தளத்தில் 274 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அதே சமயம் ராஷ்மிகாவுக்கு 50 மில்லியன் பாலோயர்கள்தான் இருக்கின்றனர்.
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரது திருமணப் பதிவிற்கான லைக்குகளையும் சேர்த்தால் 42 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. அடுத்த சினிமா பிரபலங்கள் யாராவது காதல் திருமணம் செய்து கொண்டால் அதுவரையில் இந்த சாதனை நிலைத்திருக்க வாய்ப்புள்ளது.