கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கடந்த வாரம் உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணப் புகைப்படங்களை மட்டும் இருவரும் ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இன்று சங்கீத் நிகழ்வின் புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.
பிப்., 24 அன்று நடந்த சங்கீத் புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கும் போது ஒரு கலை நிகழ்ச்சி போல நடத்தி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் நடந்தேறி உள்ளது.
இதுபற்றி ராஷ்மிகா வெளியிட்ட பதிவில், “காதல், ஆனந்தக் கண்ணீர், சிரிப்பு, இசை, பாடல், மின்னல்கள் என இரவு முழுவதும் நாங்கள் நடனமாடிய அந்த இரவு. உண்மையிலேயே மிகவும் வேடிக்கையான இரவு!!
விஜ்ஜுவும், நானும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்த விரும்பியது முதல் குடும்பத்தினர் எங்களை ஆச்சரியப்படுத்த விரும்பியது மற்றும் எங்கள் குடும்பத்தினர் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் நடனமாடுவதைக் கண்டு முழுமையாக உற்சாகமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பது வரை!
விஜய்யும் நானும் ஒன்றாக நடனமாடிய அந்த இரவு, எங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் அன்பால் சூழப்பட்டுள்ளது,” என்று சங்கீத் நிகழ்வு குறித்து ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில் “எங்கள் சங்கீத் இரவு. கண்ணீர் வரும் வரை சிரித்து, கால்கள் வலிக்கும் வரை நடனமாடி, அனைவரின் பேச்சுக்களிலும், கண்கள் கசியும் வரை ஆச்சரியங்களிலும் உணர்ச்சிகளை விழுங்கிக் கழித்த மாலைப் பொழுதை அது கொண்டாடியது. அழகான மனிதர்களால் நிரம்பிய ஒரு பெரிய மகிழ்ச்சியான விருந்து” என்றும் பதிவிட்டுள்ளார்.