உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா

பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா


'16 வயதினிலே' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பாரதிராஜா இயக்கிய படம் 'கிழக்கே போகும் ரயில்', '16 வயதினிலே' படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்ற பெரிய நட்சத்திரங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்ற சிறிய விமர்சனம் இருந்தது. இதை உடைக்க விரும்பிய பாரதிராஜா தனது இரண்டாவது படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை நடிக்க வைப்பது என்று முடிவு செய்தார்.

நாயகியாக தனது வீட்டுக்கு அருகில் வசித்த எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகாவை தேர்வு செய்து விட்டார். லண்டனில் படித்து திரும்பிய ராதிகாவை கிராமத்து பெண்ணாக மாற்ற முடிவு செய்தார். நாயகன் கேரக்டருக்குதான் ஆள் கிடைக்காமல் தடுமாறினார். இதற்காக ஆடிசன் நடத்தி தேர்வு செய்வது என்று முடிவு செய்து சென்னை தி.நகரில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஆடிசன் நடித்தினார். 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆடிசனில் கலந்து கொண்டனர்.

இவர்களில் ஆந்திராவில் இருந்து வந்த சுதாகர், சிரஞ்சீவி, மற்றும் ஹரிபிரசாத் ஆகிய மூவரும் இறுதி சுற்றுக்கு வந்தார்கள். மறுநாள் நடந்த இறுதி ஆடிசனில் நாயகனாக சுதாகர் தேர்வு செய்யப்பட்டார். சிரஞ்சீவியை அரை மனசுடன் நிராகரித்தார் பாரதிராஜா. “நீ அழகாக இருக்கிறாய், ஒரு ஹீரோ போல இருக்கிறாய். ஆனால் இந்த படத்திற்கு ஒரு கிராமத்து முகம் வேண்டும் அது உனக்கு பொருந்தவில்லை. ஆனால் நிச்சயம் உன்னை என் படத்தில் நடிக்க வைப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்தார்.

அதன் பிறகு சிரஞ்சீவி தெலுங்கில் பிசியான நடிகராகிவிட்டார். 'கடலோர கவிதைகள்' படத்தின் வெற்றிக்கு பிறகு அதனை தெலுங்கில் 'ஆராதனா' என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பாரதிராஜா. அப்போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக 9 வருடங்களுக்கு பிறகு சிரஞ்சீவியை 'ஆராதனா' படத்தில் நடிக்க வைத்தார். சத்யராஜ் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவியும், ரேகா நடித்த ஜெனி டீச்சர் கேரக்டரில் சுஹாசினியும் நடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !