தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா கதையின் நாயகியாக நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛தாய் கிழவி'. ரேச்சல், சிங்கம்புலி, இளவரசு, பாலசரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதுரை கதைக்கள பின்னணியில் பக்கா கிராமத்து படமாக குறிப்பாக பெண்களுக்கு ஒரு முக்கிய சமூக செய்தி சொல்லும் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.22 கோடி வசூலித்துள்ளது. விரைவில் 50 கோடி வசூலை கூட கடக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக சிங்கம் புலி நடித்துள்ளார். இப்பட விழாவிலேயே நான் கமலை இதுவரை நேரில் பார்த்தது கிடையாது என கூறியிருந்தார் சிங்கம் புலி. இந்நிலையில் அரசியல், தேர்தல் பணிகளுக்கு இடையே சிங்கம் புலியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் கமல். தனது ரசிகராக சிறப்பாக நடித்து இருப்பதாக அவரை கமல் பாராட்டி உள்ளார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்ததாம். படம் பற்றியும், தனது கேரக்டர் பற்றியும் கமல் குறிப்பிட்டு பேசியதாலும், பாராட்டியதாலும் மகிழ்ச்சியில் உள்ளார் சிங்கம் புலி.