உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா?

பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா?


2026ம் வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களில் முக்கியமான படமாக யஷ் நடித்துள்ள 'டாக்சிக்' படம் இருந்தது. மார்ச் 19ம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படத்தை ஜுன் 4ம் தேதி தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு வினியோகஸ்தர் தெரிவித்ததன் பேரில் படத்தைத் தள்ளி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். படம் வெளியாக இரண்டு வாரங்களே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தமிழில் விஜய் நடிக்கத் தயாரித்திருந்த 'ஜனநாயகன்' படத்தை ஏற்கெனவே தள்ளி வைப்பதாக அறிவித்தது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததே அதற்குக் காரணம். அடுத்தடுத்து அந்நிறுவனம் இரண்டு பெரிய படங்களைத் தள்ளி வைத்தது திரையுலகினருக்கு அதிர்ச்சிதான். இதனால், அந்நிறுவனம் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இது ஒருபுறமிருக்க 'டாக்சிக்' படத்திற்கு சமீபத்தில் வெளிநாடுகளில் முன்பதிவு ஆரம்பமானது. அது எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால் படத்தை இன்னும் அதிகமாக புரமோஷன் செய்து வேறு தேதியில் படத்தை வெளியிடலாம் என்ற ஆலோசனை நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள்.

அதே சமயம் தள்ளி வைக்கப்படும் இந்தப் படங்களால் ஏற்கெனவே வேறு தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த படங்கள் அவர்களது தேதிகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் சட்டமன்றத் தேர்தல் காரணமாக படங்களை வெளியிட யோசித்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் சில பெரிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜுன் மாதம் 4ல் 'டாக்சிக்' வந்தால் அந்த மாதத்தில் வெளியிட திட்டமிட்ட படங்கள் வேறு தேதியைத் தேடியாக வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !