தெலங்கானாவில் பார்க்கிங் கட்டணம் ரத்து : தமிழகத்திலும் ரத்து செய்யப்படுமா ?
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் ஊருக்கேற்றபடி, தியேட்டர்களுக்கேற்றபடி பார்க்கிங் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ரூ, ரூ.20, ரூ.30 என பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ.50 முதல் வசூலிக்கிறார்கள். மால்களுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகிவிடும். இதை எதிர்த்து பலரும் குரல் எழுப்பியும் மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இதை கண்டு கொள்ளவில்லை. மாநில அரசும் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தியேட்டர்களுக்குச் செல்வோர் குறை சொல்கிறார்கள்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் சிங்கிள் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.20 பார்க்கிங் கட்டணம் வாங்கியதை எதிர்த்து சினிமா ரசிகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது குறித்து மாநில அரசு 2021ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 121 உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அங்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது. சிங்கிள் தியேட்டர்களுக்கு மட்டும் கட்டணம் வசூலித்து வந்தார்கள்.
சட்டத்தின்படி, ஒரு நபர் வாடிக்கையாளராக இருந்து சரியான டிக்கெட் அல்லது பில் வைத்திருந்தால் பார்க்கிங் இலவசமாக இருக்க வேண்டும். இந்த உத்தரவு மூலம் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு செலவு குறையும் என இந்த வழக்கில் வாதிட்ட வக்கீல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா போல தமிழகத்திலும் தியேட்டர்களில் உள்ள பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் விலையைப் பார்த்து பயந்தே பலர் தியேட்டர்களுக்கு செல்வதைத் தவிர்த்து வருகிறார்கள். நாளுக்கு நாள் சிங்கிள் தியேட்டர்களில் பல நாட்கள், பல காட்சிகள் ரத்து செய்யப்படுவது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் யோசித்து பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், பாப்கார்ன் உள்ளிட்ட திண்பண்டங்களுக்கு நியாயாமான விலை வைத்தாலும் மட்டுமே தியேட்டர்கள் பக்கம் மக்கள் வருவார்கள், காட்சிகள் ரத்தாவதும் குறையும் என்பது மூத்த தியேட்டர்காரர்களும், தயாரிப்பாளர்களும் சொல்கிறார்கள்.
இங்குள்ள அரசியல் கட்சிகள் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அவர்களது தேர்தல் அறிக்கையில் இது போன்ற சலுகைகள் இடம் பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.