சென்னையில் வீடு இன்றி தவிக்கிறேன்... நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி விஜய் மனைவி சங்கீதா மனு
நடிகர் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் புதிதாக இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சென்னையில் தனக்கு வீடு இல்லை, நீலாங்கரை வீட்டிற்குள் விஜய் உள்ளே விட மறுக்கிறார், அதற்கு அனுமதிக்க அளிக்க வேண்டும் என கோரி உள்ளார்.
நடிகரும், தவெக., தலைவருமான விஜய் அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். கடந்த 1999ல் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை வாழ் தமிழரான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்வதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன. கடந்தவாரம் திடீரென விஜயிடமிருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் விஜய் திருமணத்தை தாண்டி நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவுகம், இதை தவிர்க்கும்படி பலமுறை சொல்லியும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியில் சொல்லவும் தயங்கமாட்டேன் என கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை அடுத்தமாதம் வருகிறது.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தை பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் இல்ல விழாவில் நடிகை திரிஷா உடன் ஜோடியாக ஒரே காரில் ஒரே கலர் உடையணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். இந்த விஷயம் மேலும் பரபரப்பாக்கியது.
இந்நிலையில் சங்கீதா புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ‛‛விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் நீலாங்கரை வீட்டில் என்னை அனுமதிக்க விஜய் மறுக்கிறார். சென்னையில் எனக்கு வேறு வீடு இல்லாததால் தங்க வீடு இன்றி தவிக்கிறேன். விவாகரத்து வழக்கு முடியும் வரை இந்த வீட்டில் என்னை தங்கியிருக்க அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும். அந்த வீடு தான் தங்களது திருமண வாழ்க்கையின் முக்கியமான இல்லமாக இருந்தது. அந்த வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது. மேலும் நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன். நடிகர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதனால் திருமண உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அடுத்தவாரத்தில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.