மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர்
தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத்சிங் திரைப்படம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஹரிஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருந்த வசூல் கணக்கு விபரம் ஒன்றை தானும் பகிர்ந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தார் இயக்குனர் ஹரிஷ் சங்கர். ஆனால் அது மறைமுகமாக நடிகர் மகேஷ்பாபுவை பற்றி அவர் குறிப்பிடுவது போல இருக்கிறது என்று உடனடியாக மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து தன்னுடைய பதிவை நீக்கிய ஹரிஷ் சங்கர், மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் கூறும்போது, “எனக்கு நேற்று ரொம்பவே பிஸியான நாளாக இருந்தது. சென்சார் அதிகாரிகளுடன் மீட்டிங், பெத்தம்மா கோவிலுக்கு சென்று வந்தது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை கவனித்தது, பாடல் புரோமோவின் இறுதிக்கட்ட செக்கிங் என தொடர்ந்து வேலைகள் அதிகம் இருந்தது. இந்த சமயத்தில் நான் எக்ஸ் பக்கத்தில் வெளியான ஒரு பதிவு ஒன்றை பாதி மட்டுமே படித்துவிட்டு அது குறித்து என்னுடைய கருத்தை தெரிவித்தேன். இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை.
ஆனால் சில நிமிடங்களிலேயே என்னுடைய குழுவினர் அதை முழுவதுமாக நீங்கள் படித்துப் பாருங்கள் என்று கூறி என்னை அலர்ட் செய்தனர். உடனடியாக நான் செய்த தவறு என்னவென்று தெரிந்தது. உடனே அதை அழித்து விட்டேன். நான் எப்போதுமே மகேஷ் பாபு மீது மதிப்பு கொண்டவன். வாரணாசி திரைப்படத்தில் அவரது பெயர் எத்தனை சாதனைகளை உருவாக்கப் போகிறது என எப்போதும் நம்புகிறேன். இது எந்த உள்நோக்கத்துடனும் மகேஷ் பாபுவையோ அல்லது அவரது ரசிகர்களையோ புண்படுத்தும் உள்நோக்கம் இல்லாமல் நடந்த தவறு.
நான் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் அன்று போக்கிரி படம் குறித்து அவருக்கு வெளியிட்டு இருந்த வாழ்த்து பதிவை பார்த்தாலே அவர் மீது நான் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். இந்த குறுகிய சமயத்தில் பல பேருடைய உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக நான் உண்மையாகவே என்னுடைய இதயத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படம் இன்னும் பத்து நாள்களில் வெளியாக இருக்கும் நிலையில் நான் இது போன்ற பதிவுகளை வெளியிடக்கூடாது என்கிற பொது அறிவு எனக்கு போதுமான அளவு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.