மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர்
நடிகர் கருணாசும், அவரது இசை குழுவில் பாடி வந்த பாடகி கிரேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியரின் மகன் கென். 'இரட்டைசுழி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'அசுரன்' படத்தின் தனுஷின் மகனாக நடித்து புகழ்பெற்றார். தற்போது அவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'யூத்' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கிரேஸ் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி இருக்கிறது. மகனை நினைத்து பயமாக இருப்பதாக அவர் கண்ணீருடன் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது: என் பையனுக்கு 'அசுரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது வெற்றிமாறன் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். 'இந்தப் படத்தில் அவன் நடித்தால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போகலாம். அதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் சொல்லுங்கள். ஆனால் இந்த படத்தில் நடித்தால் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கும்' என்று சொன்னார். நானும் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன்.
பிறகு நான் வெற்றிமாறனிடம் என் பையன் எப்படி நடிக்கிறான் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு விஷயம் சொன்னார். 'எல்லாரும் நல்லா நடிக்கிறான் என்று சொல்லி அவனை ஏத்தி விடுறாங்க. ஆனால் தனுஷ் அவனை மகனாக பார்க்க ஆரம்பிச்சிட்டார். இவன் அவரை அப்பாவாக பார்க்க ஆரம்பிச்சிட்டான் என்றால் நல்ல விஷயம். தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் எல்லா விஷயமும் கத்துக்கலாம். அவருடன் இருந்தால் நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமா பற்றி நிறைய கத்துக்குவான்' என்று சொன்னார்.
நான் இன்று இந்த மேடையில் வந்து இப்படி பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. என் மகன் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறனும் தனுஷும் தான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதைவிட அம்மாவாக ரொம்ப பயமாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக வரும் என நம்புகிறேன். என் மகனை நம்பி தயாரிப்பாளர் கோடி கணக்கில் பணம் போட்டிருக்கிறார். அவருக்கு எந்த சிரமும் வந்திடக்கூடாது. எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று கண்கலங்கி பேசினார்.