எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் பற்றி தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாகப் பேசினார். அதாவது தெலுங்கு நடிகர் காந்தாராவை பற்றி புகழ்ந்து பேசியவர் இவரை கண்டால் எம்ஜிஆர் கூட பயப்படுவார் என பேசினார். இது சர்ச்சையானது. தென்னிந்திய நடிகர் சங்கம், நாசர், விஷால் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ராஜேந்திர பிரசாத்.
அவர் கூறுகையில், ‛‛தெலுங்கு சினிமாவில் பழைய நடிகர் காந்தாராவ் பெயரில் எனக்கு விருது வழங்கினர். அந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் கடவுள் போன்ற எம்ஜிஆர் பற்றி விளையாட்டாக பேசியதை சிலர் வேண்டுமென்றே பெரிதுப்படுத்திவிட்டனர். அவரை தவறாக பேசும் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும்போது எம்ஜிஆர் தான் முதல்வர். அவரை தவறாக சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நான் வாய் தவறிய பேசியதில் யாரேனும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்வில் இனி எப்போதும் அதுபோன்று பேச மாட்டேன். என் தவறை மன்னித்து இத்துடன் இதை விட்டுவிடுங்கள்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.