'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி?
98வது ஆஸ்கர் விருது விழாவில் 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' படம் 6 விருதுகளை குவித்து சாதித்துள்ளது. ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் அதிகபட்சமாக 16 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'சின்னர்ஸ்' 4 விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த படமாக 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' தேர்வானது. இதே படத்துக்காக பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார். 'ஹாலிவுட் நடிகர் சியன் பென் 3வது முறையாக சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது.
அப்படி என்ன இருக்கிறது படத்தில். இதுவும் ஒரு போராட்ட கதைதான். பொதுவாக ராணுவ மோதலைத்தான் யுத்தம் அல்லது போர் என்பார்கள். ஆனால் இதற்கு பின்னாலும், ராணுவ போர் முடிந்த பிறகும் நடக்கும் உளவியல் ரீதியான, தனிப்பட்ட முறையிலான போரை பற்றி சொல்கிறது இந்த படம்.
பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த மக்கள் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். அவர்களின் தலைவியாக பெர்பிடியாவும் அவளின் வெள்ளைக்காரத் துணைவனும் ஆன பாப் ஆகியோர் அதிகாரவர்கத்திற்கு எதிரான பல்வேறு தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர்.
இதனிடையே பெர்பிடியாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. பின்னர், பெர்பிடியா ராணுவத்திடம் பிடிபட, பாப் குழந்தையுடன் தப்பித்து செல்கிறான். இவர்களை பழி தீர்க்க சபதம் எடுக்கும் கர்னல் லாக்ஜா இவர்களைத் தேடுகிறார். அவனது தேடுதல் 16 வருடங்கள் தொடர்கிறது. 16 வருடங்களுக்கு பிறகும் இந்த போராட்டம் எப்படி தொடர்கிறது என்பதுதான் கதை.
16 வருடத்திற்கு பிறகு அதிகாரவர்கத்தை எதிர்த்து நிற்பது பாப்பின் மகள். ஒரு காலத்தில் புரட்சிக்காரனாக இருந்த பாப் இப்போது குடிகாரனாகிவிட்ட நிலையில் மகளே போராட்டத்தை முன்னெடுக்கிறாள். நாயகனாக (பாப்) லியனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ளார். போர்க்குணத்தை ரத்தத்திலேயே கொண்டிருக்கும் அவரது மகள் வில்லாவாக சேஸ் இன்பினிட்டி நடித்திருக்கிறார். ஷான் பென் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய 9 படங்கள் ஆஸ்கர் விருது வரை வந்தவை. ஆனால் இந்த படத்தில்தான் விருதுகளை அள்ளி இருக்கிறார். பாலைவனச் சாலைகளில் நடக்கும் கார் துரத்தல் காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், காமெடி கலந்த சென்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு பலம். அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.