9 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஜினிகாந்த் அறிக்கை
தமிழ் சினிமா உலகமும், தமிழக அரசியல் உலகமும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக உள்ளன. தேவையற்ற பேச்சுக்கள், சர்ச்சைகள், மன்னிப்புகள் என அடுத்தடுத்து நடந்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்த பரபரப்பு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்தைப் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டம் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து, ''காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்ற பன்ச் வரிகளுடன் ஒரு அறிக்கையை நேற்று காலை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
நேற்று காலை எக்ஸ் தளத்தில் வெளியான அந்த அறிக்கைப் பதிவு 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ரஜினிகாந்த் இதற்கு முன்பு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சில பதிவுகளில், விஜய் கரூரில் நடத்திய கூட்டத்தில் சிக்கி 41 பேர் மரணமடைந்தது குறித்து அவர் பதிவிட்டட பதிவு 6 மில்லியன் பார்வைகளை நெருங்கி இருந்தது. அதற்கடுத்து விஜய் கட்சி குறித்து அவர் பதிவிட்ட நேற்றைய அறிக்கை 9 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது.
ரஜினியின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை அமைதி காத்து வந்த ரஜினி ரசிகர்கள், நேற்று முதல் விஜய்யையும், அவரது கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.