வருத்தப்பட்ட சிறுமியை அழைத்து விருந்து வைத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. உதய்ப்பூரில் நடந்த அத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதன்பின் ஐதராபாத்தில் திரையுலகினருக்காக திருமண வரவேற்பு நடைபெற்றது. தங்களது ரசிகர்களுக்காகவும் ஐதராபாத்தில் விருந்து வைத்தனர்.
இந்நிலையில் திதி என்ற சிறுமி இரண்டு வாரங்களுக்கு முன்பு, 'நாங்களும் உங்களுக்கு பிரண்ட்ஸ் தானே, எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை” என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.
அந்த வீடியோவைப் பார்த்த விஜய் தேவரகொண்டா, அவரை தங்களது வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பதாக கமெண்ட் செய்திருந்தார். அந்த வீடியோவும், விஜய்யின் கமெண்ட்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
நேற்று அந்த சிறுமியை குடும்பத்தினருடன் அழைத்து தங்கள் வீட்டில் விருந்து வைத்துள்ளனர் விஜய் மற்றும் ராஷ்மிகா. அவர்களே சிறுமிக்கு உணவு பரிமாறி, அவருக்கு பரிசுகளையும் கொடுத்துள்ளனர்.
அந்த சந்திப்பையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார் அந்த சிறுமி. அதற்கும் லட்சக் கணக்கில் லைக்குகள் கிடைத்துள்ளது.