25 ஆண்டுகளாக ஏன் நடிக்கலை : ‛பூவே உனக்காக' சங்கீதா
காளிதாஸ் 2 படத்தில் மூலம் 25 ஆண்டுகளுக்குபின் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார் ‛பூவே உனக்காக' சங்கீதா. சென்னையில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''எனக்கு பிடித்த ஜானரில் இந்த கதை நடக்கிறது. என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. 25 ஆண்டுகளுக்குபின் தமிழில் நான் நடிக்கிறேன் என்பது எனக்கே புதுசாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வீட்டில், குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டேன். இரவில் சரியான நேரத்தில் துாங்கிவிடுவேன். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடந்தது. ஆனாலும், படக்குழுவை பார்த்தால் எனக்கே உற்சாகம் வரும்.
இதில் பரத் ஹீரோ. படப்பிடிப்பு எப்படி இருக்குமோ என்று பயந்தேன். ஆனால், முதல்நாளில் இருந்து பரத் எனக்கு பிடித்த நடிகராக ஆகிவிட்டார். எனக்கு பிடித்த பாடல்களை செட்டில் ஒலிபரப்பினார். கடைசி நாள் படப்பிடிப்பில் வெளியூரில் இருந்து சென்னைக்கு பஸ்சில் புறப்பட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சினிமாவில்தான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை. என் கணவர் சினிமாவில் இருக்கிறார்' என்றார்.
படக்குழுவினர் வேண்டுகோளை ஏற்று, மேடையில் சொல்லாமலே யார் பார்த்தது பாடலுக்கு சில ஸ்டெப்ஸ் போட்டார். படத்திலும் இந்த பாடலுக்கு அவர் ஆடியிருப்பதாக தகவல்.