முதல் பாகத்தை மிஞ்சி விட்டது ; 'துரந்தர் 2'வுக்கு ராஜமவுலி பாராட்டு
கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திய உளவாளி ஒருவரின் உண்மை கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனாலேயே இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தில் இரண்டாம் பாகமும் முதல் பாகம் அளவிற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியும் இந்த படம் குறித்து தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “துரந்தர் முதல் பாகத்தை நான் ரொம்பவே ரசித்தேன். ஆனால் இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டத்திலும் ஆன்மாவிலும் மிஞ்சி விட்டது.. கதை எழுதப்பட்ட விதம், நட்சத்திர தேர்வு, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு, இசை, உலகத்தரமான வடிவமைப்பு மற்றும் டைரக்ஷன் என எதிலுமே குறைவில்லை.. அதே சமயம் படத்தின் அடிநாதமான உணர்வை படம் முழுக்க கடத்தி இருக்கிறார்கள். முக்கியமான திருப்பங்கள் கதையுடன் அழகாக கோர்க்கப்பட்டிருந்த விதம் படம் முழுவதும் நமக்கு ஒருவித டென்ஷன் கலந்த உணர்வை உருவாக்கியது” என்று கூறியுள்ளார்.