பிளாஷ்பேக்: கேரக்டர்களே கதை சொன்ன முதல் படம்
பல திரைப்படங்களில் படத்தில் வரும் ஒரு முக்கியமான கேரக்டர் படத்தின் கதையை சொல்லிக் கொண்டே இருக்க காட்சிகள் விரியும், இன்னும் சில படங்களில் ஒவ்வொரு கேரக்டரும் தங்களின் கதையை சொல்லும்.
ஹாலிவுட்டில் புழக்கத்தில் இருந்த இந்த பாணியை தமிழில் கொண்டு வந்த முதல் படம் 'தலை கொடுத்தான் தம்பி'. இந்த படத்தை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், மாலினி, தாம்பரம் லலிதா, 'குலதெய்வம்' வி.ஆர்.ராஜகோபால், டி.பி.முத்துலட்சுமி, டி.கே.ராமச்சந்திரன், கே.வி.சீனிவாசன், பி.எஸ்.ஞானம், கே.வி.பதி.எம்.சாந்தி, பேபி உமா, வி,ஆர்.மணி. சந்தானம், கரிகோல் ராஜு, டி.கே.சம்பங்கி, சி.பி.கிட்டான், ராஜவேலன், எம்.ஏ.கணபதி, என்.எஸ். நாராயண பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
ஒரு இளவரசி (தாம்பரம் லலிதா) வேறொரு ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சாமானியனை (மனோகர்) காதலிப்பார் இந்த காதலுக்கு மன்னன் எதிர்ப்பு தெரிவிப்பதால் தற்கொலை நாடகமாடிவிட்டு காதலன் நாட்டுக்கு தப்பிச் செல்கிறார் இளவரசி. அங்கு சென்ற பிறகுதான் தன் காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிகிறாள்.
இப்போது காதலனை மணக்கவும் முடியாது, நாட்டுக்கு திரும்பவும் முடியாது பிறகு இளவரசி என்ன செய்கிறாள் என்பதுதான் கதை. இந்த கதையை இளவரசி, மன்னர், அவளது காதலன், அவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தனி தனி கதையாக சொல்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டது.