துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான்
ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து 1000 கோடி வசூலைக் கடந்த படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படத்தைப் பாராட்டி ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உள்ள சில முன்னணி நடிகர்கள் பாராட்டியுள்ளார்கள். ஆனால், ஹிந்தித் திரையுலகத்தில் உள்ள ஹீரோக்கள் யாரும் மனம் திறந்து இதுவரை பாராட்டவில்லை.
அதேசமயம் ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமிர்கான் படத்தைப் பற்றிப் பாராட்டியுள்ளார். டில்லியில் நடைபெற்ற டில்லி சர்வதேச திரைப்பட விழா 2026ல் நேற்று கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில், “படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாக நம்புகிறேன். நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், இப்படத்தைப் பற்றிய பாராட்டுக்களை மட்டும் நான் கேட்டு வருகிறேன். 'துரந்தர்1' மற்றும் இப்போது 'துரந்தர் 2' ஆகிய இரண்டு படங்களுமே மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களால் சிறந்த படமாகக் கொண்டாடப்பட்டு வரும் 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தை ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பார்க்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதிலும் சினிமாவை அதிகம் நேசிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஆமிர்கான் போன்றவர்கள் கூட இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.