ரூ.100 கோடி வசூல் : ஏன் இந்த வௌம்பரம்…?
தமிழ் சினிமாவில் ஒரு படம் ஓடுகிறதோ இல்லையோ, “அமோக வரவேற்பு, பலத்த வரவேற்பு, இளைஞர்கள் கொண்டாடும், குடும்பங்கள் கொண்டாடும், சாதனை வசூல், அமோக வசூல், ஆரவார வசூல், அசத்தல் வெற்றி, பிளாக்பஸ்டர் வெற்றி” என படம் வெளியான மறுநாளே விளம்பரம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தியேட்டர்கள் பக்கம் போய் பார்த்தால் அந்தப் படங்களுக்கு பத்து பேர் கூட வந்திருக்க மாட்டார்கள்.
அது கூடப் பரவாயில்லை. ஆனால், படம் வெளியான சில நாட்களிலேயே 25 கோடி, 50 கோடி, 100 கோடி வசூல் என போட ஆரம்பிப்பார்கள். அதற்கான விவரம் என்ன, 'பிரேக் அப்' என்ன என்பதெல்லாம் இருக்கவே இருக்காது. அவற்றைப் பற்றி யாரும் கேள்வி கூட கேட்க மாட்டார்கள். உண்மையிலேயே அவை அவ்வளவு வசூலித்ததா அதனால் எவ்வளவு லாபம், யாருக்கு லாபம் என்ற விவரங்களும் உடனடியாக வெளிவரவே வராது.
போகப் போக, அப்படி 100 கோடி வசூல் என்று சொல்லப்பட்ட படங்கள் மூலம் நிறைய நஷ்டம் என தகவல்கள் வர ஆரம்பிக்கும். நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற புகார்கள், பஞ்சாயத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக வரும். அப்படித்தான் இப்போது 'மதராஸி' படத்திற்கான ஒரு பஞ்சாயத்து வெளிவந்துள்ளது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. படம் வெளிவந்த மறுநாளே 'பிளாக் பஸ்டர் ஹிட், பிளாக் பஸ்டர் மேட்னஸ்' என்று வீடியோ விளம்பரத்தை வெளியிட்டார்கள். அன்றே இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி படத்தைப் பாராட்டித் தள்ளினார்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போஸ்டர் வெளிவந்தது.
படம் வெளிவந்த இரண்டாவது நாள் செப்டம்பர் 7ம் தேதி 50 கோடி வசூல் 'த ராம்பேஜ் கன்டினியூஸ்' என்று வசூல் போஸ்டரை வெளியிட்டனர். ஒரு வாரம் கழித்து 'மாஸ்ஸிவ் ஆக்ஷன் பேங்' என்று போஸ்டரும் வெளிவந்தது. படம் வெளிவந்த இரண்டாவது வாரத்தில் 'ராம்பேஜ் இன் தியேட்டர்ஸ்' 100 கோடி வசூல் என்று போஸ்டர் வந்தது. அதன் பிறகு ஓரிரு சமூக வலைத்தள பதிவுகளுடன் 'மதராஸி' படத்தின் புரமோஷனை தயாரிப்பு நிறுவனம் நிறுத்திவிட்டது.
இப்போது, இயக்குனர் ஏஆர் முருகதாஸ் படத்திற்கு அதிக செலவு வைத்துவிட்டார். 115 கோடி பட்ஜெட் சொல்லி 170 கோடி செலவழித்துவிட்டார். அதனால், தங்களுக்கு 30, 40 கோடி நஷ்டம் வரும் என தயாரிப்பாளர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளாராம். இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
படம் வெளிவந்த சில நாட்களில் 100 கோடி வசூல், பிளாக் பஸ்டர் ஹிட் என விளம்பரப்படுத்திவிட்டு, இன்று 30, 40 கோடி நஷ்டம் என புகார், பஞ்சாயத்து என வந்து நிற்கிறது.
'மதராஸி' படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதே ஹிந்தியில் சல்மான் கான் நடிக்க 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு ஏஆர் முருகதாஸுக்கு வந்தது. அதனால், 'மதராஸி' படத்தை விட்டுவிட்டு 'சிக்கந்தர்' படத்தை இயக்கப் போய்விட்டார். கடைசியில் இரண்டு படங்களுமே 'பிளாப்' ஆனதுதான் மிச்சம்.
ஒரு படம் 100 கோடி வசூலிக்கிறதா, 500 கோடி வசூலிக்கிறதா என்பது முக்கியமல்ல. எவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, எவ்வளவு வியாபாரம் நடந்தது, எவ்வளவு வசூல் கிடைத்தது. அதனால் லாபமா, நஷ்டமா என்பதைப் பார்த்து பிறகு அந்தப் படத்தைப் பற்றிய வசூல் தொகை வெளியிடுவதுதானே சரி.
இன்புளூயன்சர்கள் என்று சொல்லப்படும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களை வைத்து ஒரு பொய்யான வசூல், படம் பற்றிய பொய்யான பிம்பத்தை கட்டமைத்து அதன் மூலம் போலியான வெற்றி, வசூலை ஏன் காட்ட வேண்டும். இப்போது ஐயோ நஷ்டம், திரும்ப வாங்கித் தாருங்கள் என பஞ்சாயத்திற்கு ஏன் வந்து நிற்க வேண்டும் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.
இனி 100 கோடி வசூல் என்று வந்தால் கூட அந்தப் படம் உண்மையில் வசூலித்ததா, லாபம் தந்ததா என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
'மதராஸி' படத்தால் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் 'ராசி' இல்லாமல் போய் இப்போது 'மோதல்' என வந்து நிற்கிறது. 'மதராஸி' போய் 'மோதல்ராஸி' வந்துவிட்டது.