பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்”
1960களில் தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும், குடும்ப உறவுகளின் உன்னதத்தை, தனது உணர்வுப்பூர்வமான கதை மற்றும் திரைக்கதை இயக்கத்தின் மூலம் எடுத்துரைத்து, குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ஒரு இயக்குநராகவும், நடிகர் சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனர்களின் பட்டியலில் முதலாமவரும், சிவாஜியின் 'ப' வரிசை வெற்றித்திரைப்படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஏ பீம்சிங், ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் இயக்குநர் என்பதையும் தாண்டி, படத் தயாரிப்பாளராகவும் பரிமளித்தவர்.
“ஆலயம்”, “பட்டத்து ராணி”, “பாதுகாப்பு” போன்ற திரைப்படங்களைத் தனது “சன் பீம்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரித்த முதல் திரைப்படம்தான் இந்த “சாது மிரண்டால்”.
ஓடும் காரில் பணத்திற்காக மூன்று பேரால் ஒரு வங்கி அதிகாரி படுகொலை செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் பின்னணியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “சாது மிரண்டால்”. 1958ம் ஆண்டு சூரியநாராயணா என்ற வங்கி அதிகாரி, சென்னை பாரிமுனையில் உள்ள தனது வங்கி தலைமை அலுவலகத்திலிருந்து, தி நகரிலுள்ள தனது வங்கி கிளை அலுவலகத்திற்கு பெரும் தொகையுடன் தனது நண்பரின் காரில், அவரது நண்பர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரோடு செல்லும்போது, பணத்திற்காக வங்கி அதிகாரி சூரியநாராயணா அவர்களால் கொலை செய்யப்பட்டார். அப்போது கொலையாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் தப்பிவிட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து, படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்ததோடு மட்டுமின்றி படத்தை தனது “சன் பீம்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்தும் வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஏ பீம்சிங்.
1966ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளிவந்த இத்திரைப்படத்தை, இயக்குநர் ஏ பீம்சிங்கிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வந்த திருமலை-மகாலிங்கம் என்ற இரட்டையர் இயக்கியிருந்தனர். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்து தனித்தனியாக இசையமைக்கத் தொடங்கியதும், இரட்டையர்களில் ஒருவரான ராமமூர்த்தி இசையமைத்த முதல் திரைப்படமாகவும் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “சாது மிரண்டால்”.
நடிகர்கள் நாகேஷ், மனோரமா, டிஆர் ராமச்சந்திரன், கல்பனா, ஓஏகே தேவர், குழந்தை நட்சத்திரங்கள் குட்டி பத்மினி, மாஸ்டர் பிரபாகர் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து, வணிக ரீதியாக வெற்றி பெற்றது இத்திரைப்படம். தனது 60வது ஆண்டில் பயணித்து வரும் இந்த “சாது மிரண்டால்” திரைப்படத்தை, ஹிந்தியில் “சாது அவுர் சைத்தான்” என்ற பெயரில் தயாரித்ததோடு, படத்தை ஹிந்தியில் இயக்கியும் இருந்தார் ஏ பீம்சிங்.