'காஞ்சனா' தெலுங்கு ரீ ரிலீஸ் : அசத்தல் வசூல்
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் 2011ல் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படம் 'காஞ்சனா'. சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்த படம். அப்படம் அப்போதே தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் தெலுங்கு டப்பிங் உரிமையாக 4 கோடிக்கு அப்போது விற்கப்பட்டது.
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு இந்த மாதம் மார்ச் 13ம் தேதி தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆனது. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஓடி வருகிறது. தற்போது வரை 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு டப்பிங் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இவ்வளவு வசூல் பெறுவது இதுவே முதல் முறை. தொடர்ந்து 'காஞ்சனா' படத்தின் அடுத்த பாகங்களையும் இப்படி ரீ ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகிறார்களாம்.