உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 10ல் மூன்று மொழிகளில் முக்கிய இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸ்

ஏப்ரல் 10ல் மூன்று மொழிகளில் முக்கிய இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸ்

கோடை விடுமுறை இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பமாக உள்ளது. தென்னிந்திய அளவில் பல புதிய படங்களை இந்த கோடை விடுமுறையில் வெளியிடுவார்கள். ஆனால், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு ஐபிஎல் போட்டிகளும் நடந்து வருகிறது.

இவற்றிற்கிடையில் இந்த வாரம் முதல் கோடை விடுமுறைக்கான புதிய படங்கள் வெளியாக உள்ளன. தென்னிந்திய மொழிகளில் மூன்று முக்கியமான இளம் நடிகர்களின் படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது. அவை இதர மொழிகளிலும் டப்பிங் ஆகி தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வெளியாவதுதான் ஹைலைட்.

தமிழில் மட்டுமல்லாது தனது 'டியூட்' படத்தின் மூலம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா ஆகியோரும் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் அறியப்பட்டவர் டொவினோ தாமஸ். அவர் நாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' மலையாளப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்துள்ள கயாடு லோஹர், தமிழ், தெலுங்கிலும் பிரபலமானவர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

தெலுங்கின் இளம் நடிகரான அடிவி சேஷ் நாயகனாக நடித்துள்ள 'டகாய்ட்' தெலுங்குப் படம் ஏப்ரல் 10ல் வெளியாகிறது. இப்படத்தில் மிருணாள் தாகூர், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஹிந்தியில் மட்டுமே டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

தங்களது தனித் திறமையால் சினிமாவில் முன்னேறிய பிரதீப் ரங்கநாதன், டொவினோ தாமஸ், அடிவி சேஷ் ஆகியோருக்கு எப்படியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !