ஐஸ்வர்யா ராஜேஷை புறக்கணிக்கிறதா கோலிவுட்
தமிழில் டான்சராக, சின்ன, சின்ன கேரக்டரில், சின்ன படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடித்த அட்டக்கத்தி ஹிட்டாக, அவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்தது. பின்னர் அவர் நடித்த கனா, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, வட சென்னை, ரம்மி உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன. மணிரத்னம் இயக்கும் செக்கக் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
பின்னர் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு சில ஹீரோக்களின் புறக்கணிப்பு காரணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் அப்படி அவர் நடித்த பர்ஹானா, பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, இந்தியன் கிச்சன், தீயவர் குலை நடுங்க படங்கள் ஓடவில்லை.
இந்நிலையில், தெலுங்கில் வெங்கேஷ் உடன் அவர் நடித்த சங்கராங்கி வஸ்துனம் படம் சூப்பர் ஹிட்டாக, தெலுங்கில் கவனம் செலுத்தினார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛ஓ சுகுமாரி' படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வருகிறது. பரத் தர்ஷன் இயக்கும் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தனக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என அவர் நம்புகிறார்.
தமிழ் தெரிந்த நடிகை, திறமைசாலியான நடிகை. ஆனாலும் ஏனோ ஐஸ்வர்யா ராஜேஷை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கிறது. அந்த வருத்தம் அவருக்கும் இருக்கிறது.